பிரஷாந்த் கிஷோர் ஆலோசனைப்படி தனி டிவி தொடங்க கமல் முடிவு
நெல்லை ஆகஸ்ட் 30
மக்கள் நீதி மய்யத்தின் செய்திகளை மக்களிடையே கொண்டு செல்ல தனியாக தொலைக்காட்சி தொடங்க அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார்.

நடிகர் கமல் ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி நடத்தி வருகிறார். கடந்த மக்களவை தேர்தலில் குறிப்பிடத்தக்க வாக்கு வங்கியை பெற்றது. மேலும் அடுத்த சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் நோக்கத்தில் இருக்கும் கமலுக்கு பிரபல அரசியல் வியூகம் அமைப்பாளர் பிரஷாந்த் கிஷோர் ஆலோசனை வழங்கி வருகிறார். ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கமலுக்கு முக்கிய ஆலோசனைகளை பிரஷாந்த் கிஷோரின் ஐ பேக் டீம் அளித்து வருகிறது.அவர்கள் வழிகாட்டுதலின்படி கமல் தமது சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார்.
இந்நிலையில் ம.நீ.ம கட்சியின் புதிய கட்டமைப்பு விளக்க கூட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்றது. அதில் மக்கள் நீதி மய்யத்தின் தென் மாவட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் சிறப்புரை ஆற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது, தமிழகத்தில் வரும் 2021ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பெருவாரியான தொகுதிகளைக் கைப்பற்றி, ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இதற்கான பிரச்சாரத்தை வரும் நவம்பர் 7ஆம் தேதி கமல் ஹாசன் தொடங்குகிறார். இதற்காக பெரிய அளவில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் அளவிற்கு மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வலிமை உள்ளது. இதற்கு கடந்த மக்களவை தேர்தல் முடிவுகளே உதாரணம். உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை, முதலில் அறிவிப்பு வெளியாகட்டும். அதன் பின்னர் போட்டியிடுவது பற்றி கட்சி முடிவெடுக்கும். புதிய நிர்வாகிகள் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. எங்கள் கட்சிக்கு புதிதாக தொலைக்காட்சி தொடங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்
இவ்வாறு மகேந்திரன் கூறினார்.