ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் பிரதமர் மோடி திடீர் ஆலோசனை

டெல்லி ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை இன்று பிரதமர் மோடி திடீரென சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

டெல்லி, ஜூலை-5

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15,16ம் தேதிகளில் இந்திய, சீன ராணுவத்தினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். சீன தரப்பில் 45 பேர் இறந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக லடாக் எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இரு தரப்பு ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, எல்லையில் குவிக்கப்பட்ட படைகளை விலக்கிக் கொள்வதாக முடிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே, யாரும் எதிர்பாராத வகையில், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், பிரதமர் மோடி நேற்று முன்தினம் காலை 9.30 மணிக்கு லடாக்கின் லே பகுதிக்கு வந்தடைந்தார். அங்கிருந்து விமானத்தில் பறந்தபடி, எல்லையில் உள்ள நிலைமை மற்றும் பாதுகாப்பு சூழ்நிலைகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து, அங்குள்ள ராணுவ வீரர்களுடன் உரையாற்றினார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வீரர்களையும் சந்தித்து நலம் விசாரித்தார்.

இந்நிலையில், டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை பிரதமர் நரேந்திர மோடி திடீரென சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின்போது, கொரோன தடுப்பு பணிகள் குறித்து பிரதமர் மோடி, ஜனாதிபதிக்கு எடுத்துரைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. லடாக் பயணம் குறித்தும், தேசிய மற்றும் சர்வதேச விவகாரங்கள் பற்றியும் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்துடன் பிரதமர் மோடி பேசியதாக குடியரசுத்தலைவர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *