தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு..! மக்களே வீட்டிலேயே இருங்க..!!

தமிழகம் முழுவதும் இன்று அதிகாலை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை, ஜூலை-5

தமிழகத்தில் 6-ம் கட்ட ஊரடங்கு தற்போது அமலில் உள்ளது. இதில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடந்த சில வாரங்களில் இருந்து நடைமுறையில் இருந்து வருகிறது. அந்தவகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.

அதன்படி, மாநிலம் முழுவதும் இன்று அதிகாலை முதல் நள்ளிரவு 12 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இன்று அத்தியாவசிய தேவைகளான பால் கடை, மருந்தகங்கள், பத்திரிகைகள் மட்டுமே இயங்கும். காய்கறி, மளிகை கடைகள், உணவகங்கள் உட்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதேபோன்று மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகளும், பெட்ரோல் பங்க்குகள் இன்று ஒருநாள் இயங்கவில்லை. மாநிலம் முழுவதும் உள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் உட்பட முக்கிய சாலைகளில் பேரிகார்டு மூலம் தடுப்புகளை ஏற்படுத்தி போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையை பொறுத்தவரை ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. தேவையில்லாமல் வெளியே சுற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், போலீசார் ரோந்து வாகனங்கள் மூலம் ஒவ்வொரு பகுதிகளாக சென்று பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருகிறார்களா என்பதை கண்காணித்து வருகின்றனர். முக்கிய பகுதிகளில் ட்ரோன் கேமரா மூலமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முழு ஊரடங்கு காரணமாக மாநிலம் முழுவதும் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *