மீண்டும் விருதுநகர் மாவட்ட அதிமுக பொறுப்பாளராக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நியமனம்
விருதுநகர் மாவட்ட அதிமுக பொறுப்பாளராக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீண்டும் நியமிக்கப்படுவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
சென்னை, ஜூலை-3

ஒரு குறிப்பிட்ட சமூகத்தை விமர்சிக்கும் வகையில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்துகளை வெளியிட்டு வந்தார். இது அதிமுக தலைமைக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இதனால் ராஜேந்திர பாலாஜி வசம் இருந்த அதிமுக விருதுநகர் மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டது.
கடந்த மார்ச் மாதம் விருதுநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிரடியாக விடுவிக்கப்பட்டார். எனினும் பதவி நீக்கத்திற்கான காரணத்தை அதிமுக தலைமை தெரிவிக்கவில்லை. அமைச்சர் பதவியும் பறிக்கப்படும் என செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், அதிமுகவின் விருதுநகர் மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்ட 3 மாதங்களில் அதே பதவியை மீண்டும் தலைமை அவருக்கே கொடுத்துள்ளது,.
இது தொடர்பாக அதிமுக தலைமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- விருதுநகர் மாவட்ட அதிமுக பொறுப்பாளராக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்ட செயலாளர் பதவிக்கு ஒருவர் நியமிக்கப்படும் வரை, அம்மாவட்ட பணிகளை அவர் கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.