மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு செப்டம்பர் 13-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெறும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
டெல்லி, ஜூலை-3

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் இந்திய மருத்துவ நிபுணர்களின் பரிந்துரையின்படி ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதனை அடுத்து, தற்போதைய சூழலில் நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகளை தள்ளிவைப்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தேசிய தேர்வு முகமைக்கு முன்னர் மத்திய அரசு உத்தரவிட்டது. 2020-21 கல்வியாண்டில், மருத்துவப்படிப்பு (MBBS) மாணவர் சேர்க்கைகான நீட் தகுதித் தேர்வை ஜூலை 26 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது ஆனால், கொரோனா அச்சம் காரணமாக திட்டமிட்டப்படி இந்தத் தேர்வை நடத்த முடியாத நிலை நீடித்தது.
நீட் மற்றும் ஜேஇஇ மெயின் தேர்வுகளை ரத்து செய்வது குறித்து இன்றைக்குள் (ஜூலை 3) பரிந்துரைகளை வழங்க தேசிய தேர்வு முகமை உள்ளிட்ட அமைப்புகளுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வலியுறுத்தியிருந்தது.
அதனடிப்படையில், நீட் தேர்வு செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெறும் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இன்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், ஜேஇஇ மெயின் தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் 6 ஆம் தேதி வரையிலும், ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு செப்டம்பர் 27 ஆம் தேதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.