தூத்துக்குடி அருகே விஷவாயு தாக்கி இறந்த 4 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி – முதல்வர் பழனிசாமி

தூத்துக்குடி அருகே கழிவுநீா்த் தொட்டியைச் சுத்தப்படுத்தியபோது உயிரிழந்த 4 தொழிலாளர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை, ஜூலை-3

தூத்துக்குடி அருகேயுள்ள கீழ செக்காரக்குடியைச் சோ்ந்தவா் சோமசுந்தரம். இவரது வீட்டில் உள்ள கழிவுநீா்த் தொட்டியைச் சுத்தப்படுத்தும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ஈடுபட்ட திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூா் பகுதியைச் சோ்ந்த இசக்கிராஜா (17), பாண்டி (28), பாலா (20), தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியைச் சோ்ந்த தினேஷ் (20) ஆகிய 4 பேரும் உயிரிழந்தனர்.

இந்நிலையில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்ததுடன், அவர்களது குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணத்தை முதல்வர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு :-

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டம், செக்காரக்குடி கிராமத்தில், தனியார் ஒருவருடைய வீட்டில் 2.7.2020 அன்று கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய இறங்க முயன்ற போது, திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரைச் சேர்ந்த பாண்டி, இசக்கிராஜ், பாலகிருஷ்ணன் மற்றும் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ் ஆகிய நான்கு நபர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

இச்சம்பவத்தில் உயிரிழந்த நான்கு நபர்களின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த நான்கு நபர்களின் குடும்பத்திற்கு தலா பத்து லட்சம் ரூபாய் வழங்க தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *