கொரோனா பாதித்து உயிரிழந்த முதியவரின் உடலை 2 நாளாக ஃப்ரீசரில் வைத்த குடும்பத்தார்..!

கொல்கத்தாவில் கொரோனா பாதித்த முதியவரின் உடலை குடும்பத்தினர், 2 நாட்களாக ஐஸ்கிரீம் ஃப்ரீஸரில் வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தா, ஜூலை-3

வடக்கு கொல்கத்தாவில் உள்ள அம்ஹெர்ஸ்ட் தெருவை சேர்ந்த 71 வயது முதியவர், மூச்சுத் திணறல் காரணமாக கடந்த திங்களன்று மருத்துவரிடம் சென்றுள்ளார். அவரை உடனடியாக கொரோனா பரிசோதனை செய்யுமாறு மருத்துவர் பரிந்துரைக்க, கொரோனா பரிசோதனை செய்துவிட்டு வீட்டுக்கு வந்த முதியவரின் உடல்நிலை மோசமடைந்து மரணடைந்து விட்டார். இதைத்தொடர்ந்து, தனிநபர் பாதுகாப்பு உபகரண உடை அணிந்த படி அந்த முதியவரின் குடியிருப்புக்கு வந்து மருத்துவர் பார்வையிட்டுள்ளார். எனினும், அவர் இறப்புச் சான்றிதழ் வழங்க மறுத்து, அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்க வாய்ப்புள்ளதால் உள்ளூர் போலீஸை தொடர்பு கொள்ளுமாறு குடும்பத்தினரை வலியுறுத்தியுள்ளார்.

இதைத்தொடர்ந்து, அந்த குடும்பத்தினர் சுகாதாரத்துறை, குடிமை அதிகாரிகள், காவல்துறை, அரசியல்வாதிகள் என அனைவரின் உதவியையும் நாடியுள்ளனர். எனினும், யாரும் உதவி செய்ய முன்வரவில்லை. இதற்கிடையில், இறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தினால், மயானத்தில் அடக்கம் செய்வதற்கும் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், செவ்வாயன்று காலையில் உடல் அழுகிவிடாமல் இருக்க ஐஸ்கிரீம் ஃப்ரீசர் ஒன்றை வாங்கி அதில், உடலை வைத்துள்ளனர். தொடர்ந்து, உயிரிழந்தவருக்கு கொரோனா பாசிட்டிவ் என்று முடிவு வந்துள்ளது. இதையடுத்து, அந்த முதியவர் உயிரிழந்து 48 மணி நேரத்திற்கு பின்னர், ஜூலை 1ம் தேதி பிற்பகல் 3 மணியளவில், மாநகராட்சி ஊழியர்கள் அவரது உடலை எடுத்துச் சென்று நல்லடக்கம் செய்தனர். அவர் உயிரிழந்த 50 மணி நேரத்திற்கு பின்னர் அந்த கட்டிடம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *