சென்னை காவல் ஆணையராக பொறுப்பேற்றார் மகேஷ் குமார் அகர்வால்..

பெருநகர சென்னை காவல் துறையின் 107-வது ஆணையராக, மகேஷ் குமார் அகர்வால் பொறுப்பேற்றுக் கொண்டார்.

சென்னை, ஜூலை-2

பெருநகர சென்னை காவல் துறை ஆணையராக இருந்த ஏ.கே.விஸ்வநாத‌னை, தமிழக காவல் துறை செயலாக்க ஏ.டி.ஜி.பி.,யாக பணியிட மாற்றம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டது. அவருக்கு பதிலாக, புதிய ஆணையராக, மகேஷ் குமார் அகர்வால் நியமிக்கப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து சென்னை வேப்பேரியில் உள்ள காவல் துறை ஆணையர் அலுவலகத்தில், பெருநகர சென்னை புதிய காவல் துறை ஆணையராக, இன்று காலை மகேஷ் குமார் அகர்வால் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரிடம், ஏ.கே.விஸ்வநாதன் பொறுப்புகளை ஒப்படைத்தார்.

தொடர்ந்து  செய்தியாளர்களிடம் பேட்டியளித்த சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், சென்னை மாநகர காவல் ஆணையராக நியமித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தார்.

கொரோனா தொற்றை தடுக்க விதிகளை கடைபிடிக்க வேண்டும். அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே பொதுமக்கள் வெளியே வர வேண்டும். ஊரடங்கு சமயத்தில் தேவையின்றி வெளியே வர வேண்டாம். பொதுமக்கள் வெளியே வரும்  போது கட்டாயம் முகக்கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

பொதுமக்கள் தங்களது குறைகளை காணொலி காட்சி மூலம் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்படும். சென்னை பெருநகர காவல் எல்லையில் சுமார் 20,000 காவலர்கள் பணியாற்றி  வருகின்றனர்- அவர்களின் நலன் காக்கப்படும் என்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார்.

மகேஷ்குமார் அகர்வால் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர். 1994 ஆம் ஆண்டு ஐபிஎஸ் பேட்ச் அதிகாரி. இவர் 22 வயதில் ஐபிஎஸ் ஆனார். தேனி மற்றும் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி., சென்னை பூக்கடை பகுதி துணை கமிஷனர், சென்னை போக்குவரத்து காவல் தெற்கு துணை கமிஷனர், அதைத் தொடர்ந்து சிபிசிஐடி ஐ.ஜி, மதுரை கமிஷனர் உள்ளிட்ட பதவிகளில் இருந்துள்ளார்.

இறுதியாக, மாநில அமலாக்கப்பிரிவில் ஏடிஜிபியாக இருந்த அவர், தற்போது 107 ஆவது சென்னை காவல் ஆணையராக பதவியேற்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *