தலைநகர் சென்னையில் 60 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு..!
சென்னையில் கொரோனா பாதிப்பு 60 ஆயிரத்தை தாண்டியயுள்ள நிலையில், அதிகபட்சமாக அண்ணாநகர் மண்டலத்தில் 2 ஆயிரத்து 948 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை, ஜூலை-2

சென்னையில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, 60 ஆயிரத்து 533 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் 36 ஆயிரத்து 826 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதாகவும், 929 நபர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மொத்தம் உள்ள 15 மண்டலங்களில், அதிகபட்சமாக அண்ணாநகரில் 2 ஆயிரத்து 948 பேரும், கோடம்பாக்கத்தில் 2 ஆயிரத்து 519 பேரும், ராயபுரத்தில் 2 ஆயிரத்து 369 பேரும், தேனாம்பேட்டையில் 2 ஆயிரத்து 103 பேரும், கொரோனா வார்டுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தண்டையார்பேட்டை மண்டலத்தில் ஆயிரத்து 791 பேரும், திரு.வி.க நகரில் ஆயிரத்து 775 பேரும், அடையாறு மண்டலத்தில் ஆயிரத்து 593 பேரும், அம்பத்தூரில் ஆயிரத்து 183 பேரும், வளசரவாக்கத்தில் ஆயிரத்து 80 பேரும் சிகிச்சை பெறுகின்றனர்.
திருவொற்றியூரில் ஆயிரத்து 60 பேரும், மாதவரம் மண்டலத்தில் 917 பேரும், பெருங்குடியில் 829 பேரும், ஆலந்தூர் மண்டலத்தில் 801 பேரும், மணலியில் 521 பேரும், சோழிங்கநல்லூரில் 483 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.