சசிகலா சிறையில் விதிகளை மீறியது உண்மை தான்…

பெங்களூரு, அக்டோபர்-09

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா சிறை விதிகளை மீறியது உண்மைதான் என விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் சசிகலாவுக்கு விதிமுறைகளை மீறி சிறப்பு சலுகைகள் அளிக்கப்படுவதாகவும், சிறை விதிகளை மீறி அவர் வெளியே சென்றதாகவும் பரபரப்பு புகார் எழுந்தது. இது தொடர்பாக அப்போதைய கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா திடீர் சோதனை நடத்தி விதி மீறல்களை கண்டுபிடித்தார். சிறைத்துறை அதிகாரி சத்யநாராயணராவ்வுக்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்து சசிகலா சிறையில் சொகுசாக இருந்ததாகவும் புகார் கூறப்பட்டது.

இந்த புகார் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் உயர்மட்டக்குழுவை கர்நாடக அரசு நியமித்தது. அந்த குழு தனது விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில், சிறை விதிகளை சசிகலா மீறியது உண்மைதான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. “சசிகலா சிறையில் அடைக்கப்பட்டதும் 5 செல்களில் இருந்த கைதிகளை வெளியேற்றி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், சசிகலா இரவு உடையில் வெளியே ஷாப்பிங் சென்று வந்ததும் உண்மை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சிறையில் இருந்து விதிகளை மீறி சசிகலா வெளியே சென்றது குறித்து காவல் அதிகாரி ரூபா கூறிய புகார் உண்மைதான்” எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *