அதிகாரிகளால் டார்ச்சர் வரலாம்.. பாதுகாப்பு கொடுங்க.. முக்கிய சாட்சி ரேவதி கோரிக்கை..!

சாத்தான்குளம் வழக்கில் சாட்சியம் அளித்த பெண் போலீஸ் ஏட்டு ரேவதி, “எனக்கும்-குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தூத்துக்குடி, ஜூலை-2

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட தந்தை, மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழந்த வழக்கில் இதுவரை மொத்தம் 4 பேர் மீது சிபிசிஐடி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். இந்த வழக்கின் முக்கிய திருப்பமாக மதுரை ஐகோர்ட்டில் சாத்தான்குளம் ரேவதி கூறிய சாட்சி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ரேவதி அந்த காவல்நிலையத்தில் தலைமை பெண் காவலராக பணியாற்றி வருபவர் ஆவார்.

இந்த வழக்கில் சம்பவம் நிகழ்ந்த தினத்தில், சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த பெண் போலீஸ் ஏட்டு ரேவதியிடம் மாஜிஸ்திரேட்டு விசாரித்தபோது, போலீசார் விடிய, விடிய ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய 2 பேரையும் தாக்கியதாக சாட்சியம் அளித்தார். இதையடுத்து தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக போலீஸ் ஏட்டு ரேவதி, சாத்தான்குளம் தாசில்தார் ராஜலட்சுமியிடம் மனு வழங்கினார். பின்னர் போலீஸ் ஏட்டு ரேவதி நேற்று முதல் மருத்துவ விடுப்பில் சென்றார்.

இதுதொடர்பாக போலீஸ் ஏட்டு ரேவதி கூறியதாவது:-

சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் விசாரணை நடத்த வந்த மாஜிஸ்திரேட்டு பாரதிதாசனிடம், ஜெயராஜ், பென்னிக்ஸ் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட தினத்தில் நடந்த உண்மைகள் அனைத்தையும் தெரிவித்தேன். நான் எனது பணியில் நேர்மையாகவும், உண்மையாகவும் இருக்கும் வகையில் செயல்பட்டேன். அது வெளியில் தெரியக்கூடாது என்று நினைத்தேன். ஆனால், இது வெளியில் தெரிந்து, இவ்வளவு பிரச்சனையாகும் என்று நினைக்கவில்லை.

இதுதொடர்பாக எனது உயர் அதிகாரிகள், இதுவரையிலும் என்னிடம் எதுவும் கூறவில்லை. இதனால் எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் எந்தவித பிரச்சனையும் வரக்கூடாது. எனக்கும், குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு தேவை என்று உணர்கிறேன். உயர் அதிகாரிகளால் டார்ச்சர் வரக்கூடாது. தற்போது நான் மன உளைச்சலாக இருப்பதால், என்ன செய்வது என்றே தெரியவில்லை. நான் பணிக்கு சென்று திரும்பும்போதும், எனக்கும், குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *