நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்க வாய்ப்பு
கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்டு அல்லது செப்டம்பரில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி, ஜூலை-2

இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது.
இந்தநிலையில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்டு மாதத்தின் கடைசி வாரம் அல்லது செப்டம்பர் மாதத்தின் முதல் வாரம் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து உறுப்பினர்களின் வருகையோடு பாராளுமன்ற கூட்டத்தை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாராளுமன்ற கூட்டத்தை நடத்துவது குறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும், மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவும் கடந்த மாதம் ஆலோசனை நடத்தினார்கள். அப்போது, சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் மக்களவை கூட்டத்தை பாராளுமன்றத்தின் மைய மண்டபத்திலும், மாநிலங்களவை கூட்டத்தை மக்களவையிலும் நடத்துவது பற்றி அவர்கள் ஆலோசித்தனர். கூட்டத்தொடரை காணொலி வழியில் நடத்துவது குறித்தும் இருவரும் ஆலோசித்து வருவதாகவும் அரசு அதிகாரிகள் கூறினர்.
அதேசமயம் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் பாராளுமன்ற கூட்டத்தை நடத்துவது குறித்த இறுதியான முடிவு எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை என்று அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல் மழைக்கால கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும், கூட்டத்தொடரை எவ்வாறு நடத்த வேண்டும் என்பது கூட்டத்தொடரின் தொடக்கத்தின் போது நிலவும் சூழ்நிலை பொறுத்து முடிவு செய்யப்படும் என கூறப்படுகிறது.
இரு கூட்டத் தொடர்களுக்கு இடையேயான கால இடைவெளி 6 மாதங்களைத் தாண்டக்கூடாது என்பதால், நிச்சயமாக செப்டம்பர் 22-ஆம் தேதிக்கு முன்பாக கூட்டத்தொடர் தொடங்கப்பட்டுவிடும் என தெரிகிறது.