இந்தியாவில் நெடுஞ்சாலைத் திட்டங்களில் சீன நிறுவனங்களுக்கு தடை..நிதின் கட்கரி

இந்தியாவில் நெடுஞ்சாலைத் திட்டங்களில் சீன நிறுவனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது என்று மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

டெல்லி, ஜூலை-2

மத்திய நெடுஞ்சாலை, சாலைப் போக்குவரத்து துறை மற்றும் சிறு,குறு,நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் நிதின் கட்கரி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

நெடுஞ்சாலைத் திட்டப் பணிகளில், சீன நிறுவனங்களுக்கு தடை விதித்தும், இந்திய நிறுவனங்களை அனுமதிப்பதில் உள்ள கட்டுப்பாடுகளை தளா்த்தியும் புதிய கொள்கை விரைவில் வெளியிடப்படும்.சாலை கட்டுமான திட்டங்களில், சீன நிறுவனங்களை அனுமதிக்க மாட்டோம். ஒருவேளை இந்தியாவில் உள்ள நிறுவனங்களுடன் இணைந்து கூட்டு நிறுவனமாக வந்தாலும், அவா்களுக்கு கட்டுமானத் திட்டப் பணிகளை வழங்குவதில்லை என உறுதியாக முடிவெடுத்துள்ளோம். சீன நிறுவனங்களுடன் இணைந்து முன்பைக் காட்டிலும் தற்போது குறைந்த எண்ணிக்கையிலான சாலைத் திட்டங்களே நடைபெற்று வருகின்றன. எதிா்காலத்தில் புதிய கொள்கையின்படி திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

மேலும், சாலை கட்டுமான திட்டங்களுக்குத் தகுதியான நிறுவனங்கள் எவை என்பதை நிா்ணயிப்பதற்கான வரைமுறைகளை மாற்றியமைப்பதற்காக, ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யுமாறு நெடுஞ்சாலைத் துறைச் செயலா் கிரிதா் அரமணே, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் தலைவா் எஸ்.எஸ்.சாந்து ஆகியோருக்கு உத்தரவிட்டிருக்கிறேன்.

நெடுஞ்சாலை திட்டப் பணிகளுக்கு தொழில்நுட்பம், வடிவமைப்பு உள்ளிட்டவற்றுக்காக வெளிநாட்டு கூட்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட வேண்டியிருந்தாலும், சீன நிறுவனங்களை அனுமதிக்க மாட்டோம். மேலும், சிறு,குறு, நடுத்தர தொழில் துறையில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக, அந்நிய முதலீட்டை ஊக்குவிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சீன முதலீட்டாளா்களை அனுமதிப்பதில்லை என முடிவுசெய்யப்பட்டுள்ளது.

தற்போதைய சூழலில், சீனாவில் இருந்து இந்தியத் துறைமுகங்களில் வந்திறங்கும் சரக்குகளை உடனடியாகத் தடை செய்துவிட முடியாது. அதற்கு முன்பாக, சீன இறக்குமதியை சாா்ந்திருப்பதை குறைத்துவிட்டு, படிப்படியாக சுயச்சாா்பு நாடாக இந்தியாவை உருவாக்க வேண்டியுள்ளது.

இவ்வாறு நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *