‘சத்தியமா விடவே கூடாது’ – ரஜினி ட்விட்டரில் ஆவேசம்..!!
சாத்தான்குளம் விவகாரத்தில் சம்மந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆக வேண்டும், சத்தியமா விடக்கூடாது என நடிகர் ரஜினிகாந்த் ட்வீட் செய்துள்ளார்.
சென்னை, ஜூலை-1

சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை ஜெயராஜ் – மகன் பென்னிக்ஸ் விசாரணைக் கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ள சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், பொதுமக்கள் பலர் இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்ததோடு, ஜெயராஜ் – பென்னிக்ஸ் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ரஜினிகாந்த் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தந்தையையும், மகனையும் சித்ரவதை செய்து மிருகத்தனமாக கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும், காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்து கொண்ட முறையும், பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சியடைந்தேன். சம்மந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆக வேண்டும். விடக்கூடாது. சத்தியமா விடவே கூடாது’ என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, ஜெயராஜ் – பென்னிக்ஸ் குடும்பத்தினரை நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்ததாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.