தனியார் பள்ளிகள் கட்டணம் கேட்டு பெற்றோரை நிர்ப்பந்திக்கக் கூடாது..தாமாக முன்வந்து செலுத்த தடை இல்லை.. தமிழக அரசு

தனியார் பள்ளிகள் கட்டணம் செலுத்தும் படி பெற்றோரை நிர்ப்பந்திக்கக் கூடாது என்றும் அதே நேரத்தில் பெற்றோர் தாமாக முன்வந்து கட்டணம் செலுத்துவதற்கு எந்த தடையும் இல்லை என்றும் தமிழக அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, ஜூன்-30

தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலிக்க கூடாது என்ற அரசாணைக்கு தடை கோரியும், கல்வி கட்டணம் வசூலிக்க அனுமதி வழங்க கோரியும் அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் சங்கத்தின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் கே.பழனியப்பன், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணங்களை வசூலிக்கக்கூடாது என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. பள்ளி மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலித்தால்தான் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியும். கடந்த சில மாதங்களாக பள்ளிகளில் பணியாற்றும் அனைவருக்கும் தனியார் பள்ளிகள் சம்பளம் வழங்கி வருகிறது.

கடந்த மூன்று மாதங்களாக பள்ளிகள் இயங்காவிட்டாலும், அங்கு பணியாற்றும் அனைவருக்கும் தனியார் பள்ளிகள் சம்பளம் வழங்கி வருவதாகவும், தற்போது கல்வி கட்டணம் வசூலிக்க அனுமதித்தால்தான் ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் சம்பளம் கொடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனவும், வழக்கு முடியும் வரை அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து கட்டணம் வசூலிக்க அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது சங்கம் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் விஜய்ஆனந்த் அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி வாதிட்டார். இதை கேட்ட நீதிபதி அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களும் ஆசிரியர்களுக்கும் மற்றும் பிற ஊழியர்களுக்கும் ஊதியத்தை முறையாக வழங்க வேண்டுமென்பது அரசின் கொள்கை முடிவாக இருக்கின்ற நிலையில், அரசு உதவி பெறாத பள்ளிகள் கட்டணத்தை வசூலிக்காமல் எப்படி சம்பளத்தை வழங்க முடியுமென கேள்வி எழுப்பினர். ஆன்லைன் வகுப்புகளை பெரும்பாலான பள்ளிகள் தொடங்கிவிட்டு, வகுப்புகளை நடத்த ஆசிரியர்களை கல்வி நிறுவனங்கள் நிர்பந்திக்கும் நிலையில் எப்படி சம்பளம் வழங்காமல் இருக்க முடியுமெனவும் கேள்வி எழுப்பினார். இந்த வழக்கில் தமிழக அரசு விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இந்த வழக்கை இன்று நீதிபதி ஆர்.மகாதேவன் காணொலி காட்சி மூலம் விசாரித்தார். அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண், தமிழக அரசு , தனியார் பள்ளிகள் கட்டணம் செலுத்துமாறு பெற்றோர்களை நிர்ப்பந்திக்கக் கூடாது என்று தான் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதே நேரத்தில் பெற்றோர்கள் தாமாக முன்வந்து கட்டணம் செலுத்துவதற்கு எந்த தடையும் இல்லை. மேலும் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத இடங்களுக்கான ரூ. 248 கோடியே 76 லட்சம் ஏற்கனவே தனியார் பள்ளிகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. அந்தத் தொகையைப் பயன்படுத்தி மாதங்களுக்கு ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு 3-4 மாதங்களுக்கு ஊதியம் வழங்கலாம். மும்பை உள்ளிட்ட மாநிலங்களில் தவணை முறையில் கட்டணம் செலுத்துவது தொடர்பாக மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவித்தார்.

இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி, தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் தவணைமுறையில் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக திட்டம் வகுக்க கோரி தனியார் பள்ளி சங்கங்கள் அரசுக்கு மனு அளிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். தனியார் பள்ளிகளின் இந்த கோரிக்கையை பரிசீலித்து தவணை முறையில் கட்டணம் செலுத்துவது தொடர்பான திட்டத்தை விரைவாக வகுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, அதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய அரசுத்தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் ஜூலை 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *