தடயங்களை அழிக்கக்கூடும்.. தந்தை, மகன் மரண வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
சாத்தான்குளம் தந்தை ஜெயராஜ் – மகன் பென்னிக்ஸ் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு எடுக்கும் வரை சிபிசிஐடி விசாரிக்கும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. சாத்தான்குளம் தந்தை மகன் இறந்த சம்பவத்தில் இனி ஒரு நொடியும் வீணாக்கக் கூடாது. சிபிஐ விசாரிக்கும் முன் தடயங்கள் அழிக்க வாய்ப்புள்ளது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் காட்டமாக தெரிவித்துள்ளனர்.
மதுரை, ஜூன்-30

சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ் – மகன் பென்னிக்ஸ் உயிரிழந்த வழக்கின் விசாரணை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் பி.என். பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் முன்பாக நடைபெற்று வருகிறது. விசாரணையில் நீதிபதிகள், உடற்கூறு அறிக்கையின்படி, ஜெயராஜ் – பென்னிக்ஸ் ஆகியோரது உடலில் மோசமான காயங்கள் இருப்பது தெரிய வந்துள்ளதால், காவல்துறையினர் மீது வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது என்று கூறியதோடு, இந்த வழக்கில் தடயங்களை மறைக்க வாய்ப்புள்ளதால், சிபிஐ விசாரணைக்கு முன்னர், இந்த வழக்கை நெல்லை சரக டிஐஜி அல்லது சிபிசிஐடி விசாரிக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பியிருந்தனர்.
அதன்படி, சிபிஐ விசாரணைக்கு எடுக்கும் வரை, சிபிசிஐடி இவ்வழக்கை விசாரிக்கும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். நெல்லை சரக டிஐஜி மூன்று மாவட்டங்களுக்கு பொறுப்பு என்பதால், அவர் தற்போது கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டிருப்பதால் நெல்லை சிபிசிஐடி டிஎஸ்பி அனில் குமார் இவ்வழக்கை விசாரிக்க நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
மேலும், ஜெயராஜ் – பென்னிக்ஸ் குடும்பத்தினர் நீதி கிடைக்கும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருப்பதால் விசாரணையை ஒரு நொடி கூட தாமதிக்கக்கூடாது என்று கூறிய நீதிபதிகள், நெல்லை சிபிசிஐடி டிஎஸ்பி இன்றே வழக்கின் விசாரணையைத் தொடங்க உத்தரவிட்டுள்ளனர்.