சாத்தான்குளம் தந்தை, மகனை விடிய விடிய லத்தியால் அடித்துள்ளனர்.. மாஜிஸ்திரேட் பாரதிதாதன் அறிக்கை..!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ் – மகன் பென்னிக்ஸை விடிய விடிய காவலர்கள் லத்தியால் அடித்துள்ளனர் என்று நீதித்துறை நடுவர் பாரதிதாசன் தெரிவித்துள்ளார்.

மதுரை, ஜூன்-30

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பாக சாத்தான்குளம் காவல்நிலையத்தில் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை மேற்கொண்டார். இந்த விசாரணையின்போது காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் குமார், டிஎஸ்பி பிரதாபன், காவலர் மகாராஜன் ஆகியோர் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததாகவும், வழக்கு ஆவணங்களை தர மறுத்ததாகவும் கூறி மாஜிஸ்திரேட் பாரதிதாசன், உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு மின்னஞ்சல் வாயிலாக புகார் அளித்திருந்தார்.

காவல் அதிகாரிகளை உன்னால் ஒன்றும் செய்ய முடியாது என காவலர் மகாராஜன் அவதூறாக பேசியதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதற்கு அதிருப்தி தெரிவித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, மூன்று காவலர்களையும் உடனடியாக பணியிட மாற்றம் செய்ய உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், மாஜிஸ்திரேட் பாரதிதாசன், தனது விசாரணை தொடர்பான விரிவான அறிக்கையை உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு அனுப்பி உள்ளார்.

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் நேரடியாகச் சென்று விசாரணை நடத்திய நீதித்துறை நடுவர் பாரதிதாசன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளைக்கு அளித்த அறிக்கையில் பல்வேறு அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியாற்றிய நேரடி சாட்சியான தலைமைக் காவலர் ரேவதியிடம் விசாரணை நடத்தியதில், தந்தை ஜெயராஜ் – மகன் பென்னிக்ஸை காவலர்கள் விடிய விடிய இரவு முழுவதும் கடுமையாக தாக்கியதையும், இதனால், காவல்நிலைய மேஜை மற்றும் லத்தியில் ரத்தக் கறை ஏற்பட்டதையும் தெரிவித்திருந்ததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, சாத்தான்குளம் காவல்நிலையத்துக்கு 28-ம் தேதி காலை 10 மணியளவில் சென்றிருந்தேன். அங்கு வழக்கு தொடர்பான பதிவேடுகள், கோப்புகள் ஆகியவற்றை நிலைய எழுத்தரை கொண்டு வர பணிக்கப்பட்டு ஆய்வுகள் செய்யப்பட்டு வந்தன.

மேலும் சம்பவத்தின் நேரடி சாட்சியமான காவல் நிலைய கண்காணிப்பு கேமராவில் சம்பந்தப்பட்ட பதவுகளை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுப்படி, பதிவிறக்கம் செய்யும் பொருட்டு உதவியாளர் வரவழைக்கப்பட்டார். சாத்தான்குளம் காவல்நிலையத்தில் 19-ம் தேதி நடைபெற்ற சம்பவம் தொடர்பான அனைத்து சிசிடிவி காட்சிகளும் கணினியில் அழிக்கப்பட்டிருந்தன. சிசிடிவி காட்சிகள் தானாகவே தினமும் அழிந்து போகும் வகையில் செட்டிங்ஸ் மாற்றப்பட்டுள்ளது. சர்வரில் போதுமான இடவசதி இருந்தும், தினமும் பதிவுகள் தானாகவே அழியும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.

சாத்தான்குளம் தலைமைக் காவலர் ரேவதி சாட்சியம் அளிக்கும் போது மிகுந்த அச்சத்துடன் காணப்பட்டார். சாட்சி சாட்சியம் அளித்தும் தனக்கு மிரட்டல் வரும் என்றும் மிகுந்த பயத்துடன் காணப்பட்டார். காவலர் ரேவதி கூறுகையில், காவல்நிலையத்தில் கைதிகள் இருவரையும் ( தந்தை – மகன்) அங்கிருந்த காவலர்கள் அவர்களை விடிய விடிய அடித்ததாகவும், அதில் லத்தி மற்றும் காவல்நிலைய மேஜையிலும், இரத்தக் கரை படிந்துள்ளதாகவும், அதனை அவர்கள் அழிக்க நேரிடும் என்றும் அவற்றை உடனடியாக கைப்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார். காவல்நிலையத்தில் இருந்த காவலர்கள் விசாரணையை விடியோ எடுத்தும், வாக்குமூலம் கொடுக்கும் ரேவதியை மிரட்டும் தொணியிலும் ஈடுபட்டனர்.

காவல்நிலையத்தில் விசாரணை நடத்திக் கொண்டிருந்த போது, மகாராஜன் என்ற காவலர், என்னை பார்த்து, ‘உன்னால ஒன்னும் புடுங்கமுடியாதுடா’ என்று என் முதுகுக்கு பின்னால் என் காதில் விழும்படி பேசி அங்கு அசாதாரண சூழ்நிலையை உருவாக்கினார்.
வாக்குமூலம் கொடுத்த காவலர் ரேவதி, கடைசியில் வாக்குமூலத்தில் கையெழுத்திட மறுத்துவிட்டார். மிகவும் சிரமப்பட்டே கையெழுத்தை பெற முடிந்தது. விசாரணையின் போது காவலர் மகாராஜன் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை.

மேலும், அவரது லத்தியை சொந்த ஊரில் உள்ளது என்றும், போலீஸ் குடியிருப்பில் உள்ளது என்றும் அங்கும் இங்கும் நடந்து கொண்டு ஒத்துழைக்க மறுத்தும், வரேன் இரு என்று ஒருமையில் சொல்லி பின் லத்தியே தனக்கு இல்லை என்று கூறி நின்று கொண்டார்.

இதனால் அவரின் மீது கை வைத்து தள்ளி அழைத்துச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது. மேலும் அங்கிருந்த காவலர்களில் ஒருவரிடம் லத்தியை கேட்டபோது அவர் எகிறி குதித்து தப்பி ஓடிச் சென்றுவிட்டார். இவை அனைத்தையும் அங்கிருந்த காவலர்கள் விடியோ எடுத்தனர்.

இந்நிலையில் சூழல் சரியில்லா நிலையில் அங்கிருந்து கிளம்ப நேரிடும் போதும் கூட சாட்சியம் அளித்த ரேவதி கையெழுத்திட மறுத்துவிட்டார். வெகு நேரத்துக்கு பின்னர் அவரிடம் பாதுகாப்பு குறித்து உறுதி அளித்த பின் அவர் வாக்குமூலத்தில் கையெழுத்து பெறப்பட்டு அங்கு நிலைமை பாதுகாப்பானதாக இல்லாததாலும், காவல்துறையினர் அங்காங்கே சூழ்ந்து கொண்டும் நடக்கும் நிகழ்வுகளை தனது செல்போனில் பதிவு செய்து கொண்டும் நீதிமன்ற ஊழியர்களை மிரட்டிக் கொண்டும் இருந்ததால் அங்கிருந்து புறப்பட்டோம்.

என்று மாஜிஸ்திரேட் தனது அறிக்கையில் கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *