சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் முழு ஊரடங்கு ஜூலை 5 வரை நீட்டிப்பு
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை மாவட்ட பகுதிகளில் முழு ஊரடங்கு ஜூலை 5-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, ஜூன்-29

தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முழு ஊரடங்கு உத்தரவு தற்போது அமலில் உள்ள பகுதிகளான பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், திருவள்ளூர் மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், திருவள்ளூர் நகராட்சி, கும்மிடிபூண்டி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பேரூராட்சிகளிலும் மற்றும் பூவிருந்தவல்லி, ஈக்காடு மற்றும் சோழவரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், செங்கல்பட்டு
மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள்,
செங்கல்பட்டு மற்றும் மறைமலைநகர் நகராட்சிகளிலும், நந்திவரம்- கூடுவாஞ்சேரி பேரூராட்சியிலும் மற்றும் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நோய்த்தொற்று அதிகம் உள்ளதை கருத்தில் கொண்டு, நோய்ப்பரவலை தடுக்க நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில் பேரிடர் மேலாண்மை சட்டம், 2005-ன் கீழ் 19.6.2020 நள்ளிரவு முதல் 30.6.2020 இரவு 12 மணி வரை 12 நாட்களுக்கு அமல்படுத்திய முழு ஊரடங்கு உத்தரவு மற்றும் மதுரை மாவட்டத்தில் மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகள், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் வட்டாரங்களுக்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 24.6.2020 நள்ளிரவு முதல் 30.6.2020 இரவு 12 மணி வரை 7 நாட்களுக்கு அமல்படுத்திய முழு ஊரடங்கு, கொரோனா நோய்த்தொற்றை ஒரு கட்டுக்குள் கொண்டு வருவதற்கு உதவியதால், இந்த முழு ஊரடங்கு மேற்கண்ட பகுதிகளில் மட்டும் 5.7.2020 வரை தொடரும். 19.6.2020-க்கு முன்னர் சென்னை மற்றும் அதை ஒட்டியுள்ள மாவட்டங்களில் உள்ள பகுதிகளில் இருந்த ஊரடங்கின் நிலையே 6.7.2020 நள்ளிரவு முதல் 31.7.2020 நள்ளிரவு 12.00 மணிவரை தொடரும்.
அதேபோல் மதுரை மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் 24.6.2020க்கு முன்னர் இப்பகுதிகளில் இருந்த ஊரடங்கின் நிலையே 6.7.2020 நள்ளிரவு முதல் 31.7.2020 நள்ளிரவு 12.00 மணிவரை தொடரும்.
ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட காய்கறி/பழக்கடைகளைப் போன்று, பெருநகர சென்னை மாநகராட்சி, மாநகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகளிடம் இருந்து முறையான வியாபார அனுமதி பெற்ற மீன் கடைகள்,
கோழி இறைச்சி கடைகள் மற்றும் முட்டை விற்பனை கடைகள் சமூக இடைவெளி நடைமுறைகளுக்கு உட்பட்டு அனுமதிக்கப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.