தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம்…! தூத்துக்குடி ஏ.எஸ்.பி. உட்பட 3 பேர் நேரில் ஆஜராக உத்தரவு

சாத்தான்குளம் தந்தை மற்றும் மகன் மரணமடைந்த விவகாரத்தில் தூத்துக்குடி ஏ.எஸ்.பி. குமார் உள்பட 3 பேர் நேரில் ஆஜராக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை, ஜூன்-29

சாத்தான்குளத்தில் விசாரணைக் கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்ட தந்தை, மகனுமான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்திற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்து வருவதோடு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தாமாகவே முன்வந்து வழக்கை விசாரித்து வருகிறது.

சாத்தான்குளம் காவலர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்காததால், வருவாய்த்துறை அதிகாரிகள் சாத்தான்குளம் காவல்நிலையத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. மேலும் தடயவியல் துறை அதிகாரிகள் சாத்தான்குளம் காவல்நிலையத்திற்கு சென்று அங்குள்ள தடயங்களை சேகரிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதனிடையே இந்த விவகாரத்தில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரும், 2 காவல் உதவி ஆய்வாளர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு புதிதாக தலைமை காவலர், சிறப்பு உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 27 பேர் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில இந்த வழக்கு தொடர்பாக தூத்துக்குடி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார், டி.எஸ்.பி. பிரதாபன், காவலர் மகாராஜன் ஆகியோர் நாளை காலை ஆஜராக வேண்டும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும், காவல் அதிகாரிகள் 3 பேரையும் உடனே பணியிட மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கவும் ஆணை பிறப்பித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *