சென்னையில் கொரோனா தடுப்பில் களமிறங்கிய 3500 களப்பணியாளர்கள் – சென்னை மாநகராட்சியின் அசத்தல் திட்டம்!

சென்னை, ஜூன்-29

தமிழகத்தில் 5 ம் கட்ட ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில்,
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கொரோனா தொற்று பரவலை தடுக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் தமிழ உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்னை மாநகராட்சிக்கு தொடர்ந்து ஆலோசனைகளை வழங்கி வருகிறார். இதைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளை முழு வீச்சில் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்க உருவாக்கப்பட்ட மைக்ரோ திட்டத்தின் செயல்பாடுகள் பெரிய அளவில் பயன் அளித்து வருகின்றன. நோய் தொற்று பரவுதலை கட்டுப்படுத்தவும், நோய் தொற்று அதிகமுள்ள இடங்களை அடையாளங்காணவும், நோயாளிகளை கண்டறியவும், நோயாளிகளின் தொடர்புகளை அறியவும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்கவும், பாதிக்கப்பட்ட இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தவும் மைக்ரோ திட்டம் பயனுள்ளதாக அமைந்துள்ளது. மாநகராட்சி சார்பில் நடத்தப்படும் காய்ச்சல் பரிசோதனை மையங்கள் மூலம் பொதுமக்கள் அதிக பயன் அடைந்து வருகின்றனர். அதே போல உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவுறுத்தலை ஏற்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், மாநகராட்சி சார்பில் களப்பணியாளர்களை நியமித்து
வீடுகளுக்கே நேரடியாக சென்று தெர்மல் பரிசோதனை மேற்கொள்வதோடு அறிகுறிகள் குறித்து கேட்டறிய நடவடிக்கை எடுத்துள்ளார்.

தற்போது சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் மாநகராட்சி சார்பில் அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் 143 மையங்கள், மண்டல வாரியாக 209 மையங்கள், நடமாடும் மருத்துவ குழு 85 என மொத்தம் 437 காய்ச்சல் பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

காய்ச்சல் பரிசோதனை மையங்களில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் அடங்கிய மாநகராட்சி ஊழியர்கள் அடங்கிய குழுவினர் பொதுமக்களிடம் அறிகுறிகள் குறித்து கேட்டறிந்து, கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருந்தால் அவர்களை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் உள்ள சுமார் 85 லட்சம் மக்களை பாதுகாத்து, கண்காணிக்கும் வகையில் மொத்தமுள்ள 200 மண்டலங்களிலும் 3500 களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஒவ்வொருவரும் தினமும் 5 முதல் 10 தெருக்களில் வீடு வீடாக சென்று ஆய்வு நடத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களை கண்டறிதலும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட வர்களை கண்காணிக்கவும் என அவர்களுக்கு பணி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை தினமும் 3 முறை தொடர்பு கொண்டு, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யும் பணியில் இந்த களப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மருந்துகள் வழங்குதல், காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் வாங்கிக் கொடுத்தல் என களப்பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் சேவை பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *