தேஜஸ் ரயில் பயணம் குறித்து பா.ம.க. முன்னாள் எம்.பி. யின் ஆட்டோகிராஃப் பகிர்வு…

அக்டோபர்-09

”முதல் முதல் போன சிக்கு புக்குப் பயணம்” என்ற ஆட்டோகிராஃப் படப் பாடலின் வரிகள் ரயில் பயணத்தின் கவர்ச்சியை வெளிப்படுத்தும். நான், ஒரு வயதுக் குழந்தையாக இருந்தபோது என்னை தூக்கிக் கொண்டு என் அம்மாவும், அப்பாவும் ரயிலிலேயே பயணம் செய்தார்கள். அப்பொழுது அந்தப் பெட்டியில் பித்துக்குளி முருகதாஸ் என்ற சிவனடியார் என் பெற்றோருடன் பயணம் செய்திருக்கிறார். ‘செந்தில்’ என்ற என் பெயரை அவர்தான் வைத்ததாக என் அம்மா சொன்னார்கள். நான் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது மொரப்பூரிலிருந்து அரக்கோணத்துக்கு, ஒலவக்கோடு எக்ஸ்பிரஸில் சென்றது தான் என் நினைவில் இருக்கும் முதல் ரயில் பயணம். இரவு ஏழு, எட்டு மணி வாக்கில் புறப்பட்ட ரயிலில் போன அந்தப் பயணத்தின் பிரமிப்பு இப்போதும் பசுமையாக நினைவிருக்கிறது. கல்லூரி மாணவர்களின் இளமை ததும்பும் சம்பவங்களைச் சுமந்து, காதலர்களை இணைத்த அதே ரயிலில், கதையின் நாயகன் இறுதியாகக் கண்மூடிய கதையை இனிக்க, இனிக்கத் தந்த “ஒரு தலை ராகம்”  திரைப்படத்தைத் தான் மறக்க முடியுமா?

ரயில்வே இந்திய மக்களின் இதயங்களோடும், உணர்வுகளோடும் கலந்திருக்கிறது. ரயில் இந்தியப் பண்பாட்டின் இணைப்புப் பாலம். ரயில் தண்டவாளங்கள், இந்திய வரலாற்றோடு பின்னிப் பிணைந்திருக்கின்றன. ரயிலில் முதல் வகுப்பில் பயணம் செய்ய முறையான பயணச்சீட்டு வாங்கி இருந்தும்,  தென்னாப்பிரிக்காவில் காந்தி முதல் வகுப்புப் பெட்டியில் இருந்து தூக்கி எறியப்பட்டது தான் அவருடைய வாழ்க்கையின், இந்திய விடுதலைப் போரின் மிக முக்கியமான நிகழ்வு. மணியாச்சி ரயில் நிலையத்தில் ஆங்கிலேய கலெக்டர் ஆஷ் துரையை வாஞ்சிநாதன் சுட்டுக்கொன்ற சம்பவம் ஒரு வரலாற்று நிகழ்வு. கோத்ரா ரயில் எரிப்பு சம்பவமும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மதக் கலவரங்களும் இந்திய வரலாற்றின் முக்கியமான நிகழ்வுகள்.

இந்திய நாட்டைக் கொள்ளையடிப்பதற்கு வேண்டிய கட்டுமான வசதியை உருவாக்குவதற்காக ஆங்கிலேயர்கள் ரயில் தண்டவாளங்களை அமைத்தார்கள் என்று கூறப்படுவது உண்டு. அதில் உண்மை இருந்தாலும், இந்திய நாட்டின் மிகப்பெரிய போக்குவரத்துச் சாதனமாக ரயில்வே அமைய அடித்தளமிட்டு அதைப் பெருமளவு விரிவுபடுத்தியவர்கள் ஆங்கிலேயர்கள் தான்.‌ ரயில்கள் வெறும் போக்குவரத்துச் சாதனங்களாக மட்டுமல்ல, சமத்துவத்தை நிறுவிய சமூக சீர்திருத்தக் கருவிகளாகவும் விளங்கின. இந்திய சாதியமைப்பின் மேல் அடுக்கில் இருந்தவர்களையும், தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கப்பட்டவர்களையும் முதன்முதலில், அருகருகில், சமமாக அமர வைத்தது இந்திய ரயில்வே தான். இந்தியாவின் மிகப்பெரிய பணியாளர்களைக் கொண்ட நிறுவனமும் இந்திய ரயில்வே தான். இட ஒதுக்கீட்டின் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களை பெருமளவில் பணியமர்த்தியதும் இதே ரயில்வே தான்.

174 ஆண்டுகளாக அரசால் நிர்வகிக்கப்பட்டு வந்த ரயில்வே துறையில் முதன் முறையாக தனியாருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. உத்தரப்பிரதேசத்தின் லக்னோவில் இருந்து டெல்லிக்குச் செல்லும் தேஜஸ் ரயில் சேவை தனியாரிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த தனியார் ரயிலில், விமானங்களில் இருப்பது போல செக்கச் செவேல் என்ற, முகத்துக்கு ஏராளமான ஒப்பனைகள் செய்த பணிப் பெண்கள் இருப்பார்கள்.‌ விமானத்தில் வழங்கப்படுவது போல தரமான உணவு வழங்கப்படும். லக்னோவில் இருந்து டெல்லி செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸின் ஏசி இருக்கைக் கட்டணம் 960 ரூபாய்.  இந்தத் தனியார் இரயிலில் குறைந்தபட்ச கட்டணம் 1,280 ரூபாய். விமானத்தில் இருப்பது போல இந்த இரயிலின் இருக்கைகள் கிராக்கிக்கு ஏற்றபடி அதிகமான விலைக்கு (ஏறக்குறைய ஏலத்தில்) விற்கப்படும். எனவே ஒரே விதமான இருக்கையில் அமர்ந்து செல்ல வெவ்வேறு விதமான கட்டணங்கள் இருக்கலாம். அதிகபட்சமாக ஒரு இருக்கையின் கட்டணம் ரூபாய் 4,785. தொடக்கத்தில் இந்த ரயில், இந்திய அரசு நடத்தும் ரயில்வேயின் இரயில்களை விட தூய்மையானதாகவும், வசதிகள் அதிகமானதாக இருக்கும்.

துபாயில், வீடுகளுக்கு வந்து டிக்கெட் கொடுத்து, ட்ராவல்ஸ் நடத்திய சாதாரண டிராவல் ஏஜென்ட் ஆக இருந்த நரேஷ் கோயல் தொடங்கிய ஜெட் ஏர்வேஸ், உலகத்தின் ஏழாவது பெரிய விமான சேவை நிறுவனமாக உயர்ந்தது. அது சில வாரங்களுக்கு முன்பு தன் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் தடுமாறியது! டெக்கான் ஏர்வேஸ் மிக வேகமாக வளர்ந்து இப்போது மூடப்பட்டு விட்டது. சகாரா ஏர்வேஸுக்கும் இதே கதிதான். சன் குழுமம் வாங்கிய வேகத்திலேயே ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தில் இருந்து விலகி விட்டது.

இந்தியாவில் எல்லாத் தொழில்களும், நிறுவனங்களும் அரசின் கையில் தான் இருக்க வேண்டும் என்றோ, தனியாரிடம் எதுவும் இருக்கக்கூடாது என்றோ யாரும் சொல்ல முடியாது. ஏனென்றால் இந்தியா கம்யூனிச நாடு கிடையாது. சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சிக்குப் பிறகு கண்ணுக்கு எட்டிய தொலைவில் கம்யூனிச நாடு ஒன்று உருவாவதற்கான வாய்ப்பு இல்லை.

ஆனால் அதே சமயம், நம் நாட்டில் சமூக நீதியைப் பாதுகாத்து வரும் அமைப்புகளை தனியார் மயமாக்குவதை எதிர்த்தே தீரவேண்டும்‌. இந்திய ரயில்வே வெறும் போக்குவரத்து நிறுவனம் கிடையாது. இந்த நாட்டின் மிக அதிகமான பணியாளர்களை கொண்ட நிறுவனம். இட ஒதுக்கீட்டின் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வாய்ப்பளித்த நிறுவனம். இதனைத் தனியார் மயமாக்குவதன் மூலம், பின்தங்கிய, தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கிடைத்து வந்த வேலை வாய்ப்பு உரிமையின் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இரயில், ஏழை மக்கள் பயணம் செய்யும் சாதனம். மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் ரயில்வே பாஸ்கள் தான், குறைந்த சம்பளங்களில் பணி செய்யும் தொழிலாளர்களுக்கும், கூலித்தொழில் செய்பவர்களுக்கும், அவர்கள் வருவாயில் கட்டுப்படியாகக் கூடிய செலவில் பயணச் செலவை வைத்திருக்கின்றன.  வட மாநிலங்களிலிருந்து வந்து தமிழகத்தில் சென்னையிலும், திருப்பூரிலும், கோயம்புத்தூரிலும் பணிபுரியும் பல்லாயிரக்கணக்கான கூலித் தொழிலாளர்களுக்கு ரயில் பயணம் மட்டுமே சாத்தியமானதாக இருக்கிறது.

ஏழை, எளியவர்களின் வாகனமாக இருக்கும் ரயில்வேயை தனியாருக்குத் தாரைவார்த்து, பணக்கார மக்களின் பயன்பாட்டுக்கான கருவியாக மாற்றுவது எந்த வகையில் நியாயம்? இந்தியாவின் பணக்காரர்களுக்கு தேவைப்படும் வசதிகளை மற்றும் சிந்திக்கின்ற, உழைக்கும் மக்களை பற்றிக் கொஞ்சமும் சிந்திக்காத ஒரு மேலடுக்கு (Elitist) சித்தாந்தம் நிலவுகிறது.

பின்லாந்து நாடு முதலாளித்துவ நாடு தான். ஆனால் உலகத்தின் மிகச் சிறந்த கல்வியை அந்த நாடே அளிக்கிறது. உலகின் மிக மகிழ்ச்சியான மாணவர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்தில் பின்லாந்து பள்ளி மாணவர்கள் இருக்கிறார்கள். பின்லாந்தில் கல்வி 100 விழுக்காடு அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

கல்வி, மருத்துவம், போக்குவரத்து, சாலைகள் போன்ற அடிப்படை வசதிகளை அளிப்பது அரசுடைய கடமை. இந்த சேவைப் பணிகளை 100 விழுக்காடு அரசு மட்டுமே நடத்த வேண்டும். இந்தியாவின் ராணுவ பயன்பாட்டிற்கான விமானங்களைத் தயாரிப்பதற்கு, அந்தத் துறையில் எந்த முன் அனுபவமும் இல்லாத அம்பானிகளை அழைத்து வாய்ப்பளிக்கிற அரசு இப்படி எல்லாம் நினைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *