தந்தை, மகன் மரணம் – சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் சஸ்பெண்ட்

தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரை சஸ்பெண்ட் செய்து டிஐஜி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை, ஜூன்-28

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும், ஊரடங்கை மீறி தங்களது செல்போன் கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி, கடந்த 19-ந்தேதி இரவில் சாத்தான்குளம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு கைது செய்யப்பட்டனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவர்களை போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட மகனும், தந்தையும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக மதுரை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரித்ததுடன், கோவில்பட்டி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன், சாத்தான்குளத்தில் தங்கியிருந்து சாட்சிகளிடமும், கோவில்பட்டி சிறையிலும் நேரடியாக விசாரணை நடத்த அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளராக இருந்த ஸ்ரீதரை சஸ்பெண்ட் செய்து டிஐஜி உத்தரவிட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த நிலையில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக இச்சம்பவம் தொடர்பாக காவல் உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், ஏட்டு முருகன், காவலர் முத்துராஜ் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *