கொரோனா வேகமாக பரவ இதுதான் காரணம்..சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் சொன்ன விஷயம்..!
கொரோனாவை தடுக்க, நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான உணவுகளை சாப்பிடுவது அவசியம். நோய் எதிர்ப்பு சக்தி இல்லாததால் தான் கொரோனா வேகமாக பரவுகிறது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை, ஜூன்-27

சென்னை மாநகராட்சியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. 3 மாதங்கள் ஆன நிலையிலும் இதனை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர். சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் 13 மண்டலங்களில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.
இந்நிலையில், தண்டையார்பேட்டை மண்டலத்தில் மருத்துவ முகாமை ஆய்வு செய்தபின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் தினமும் 32,000 கொரோனா பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன என்றார்.
மேலும் பேசிய அவர், சென்னையில் வீடு வீடாக சென்று கொரோனா அறிகுறி உள்ளதா? பரிசோதனை நடத்தப்படுகிறது. கொரோனா நோயாளிகளுக்கு வேறு நோய் இருந்தால் அதற்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. கொரோனா என்பது சளி, காய்ச்சல் போன்றதொரு பாதிப்பு; எனவே யாரையும் ஒதுக்கி வைத்துவிட வேண்டாம். மாஸ்க், கை கழுவுவது மிகவும் அவசியம். முகக்கவசம் அணிதல், சமூக விலகலை கடைபிடித்தல் போன்றவை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க உதவும். மக்கள் ஒத்துழைப்பால் பல இடங்களில் தொற்று குறைந்தது. பாதிப்பு எண்ணிக்கையை கண்டு மக்கள் அஞ்ச வேண்டாம். சென்னையில் 1,974 குடிசைப் பகுதிகள் கண்டறியப்பட்டு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்டால் மரணம் நிகழும் என அச்சப்படக்கூடாது; இதுவரை 56% பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவை தடுக்க, நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான உணவுகளை சாப்பிடுவது அவசியம். நோய் எதிர்ப்பு சக்தி இல்லாததால் தான் கொரோனா வேகமாக பரவுகிறது என அவர் கூறினார்.