விதிகளை பின்பற்றவில்லை.. தமிழகத்தில் பாரத் நெட் திட்டத்திற்கான டெண்டரை ரத்து செய்தது மத்திய அரசு…!!!
தமிழகத்தில் பாரத் நெட் என்ற இண்டெர்நெட் திட்டத்திற்கான டெண்டரை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
டெல்லி, ஜூன்-27

அனைத்து மாநிலங்களிலும் உள்ள, கிராம ஊராட்சிகளை இணைத்து, அரசின் சேவைகளை, இணையதளம் வழியாக, மக்கள் பெற வசதியாக, ‘பாரத் நெட்’ என்ற திட்டத்தை, மத்திய அரசு அறிவித்தது. இதன்படி, தமிழகத்தில் உள்ள, 12 ஆயிரத்து, 524 கிராம ஊராட்சிகளும், ‘ஆப்டிக்கல் பைபரால்’ இணைக்கப்படுகின்றன. இத்திட்டம் மத்திய அரசின் முழு நிதி உதவியுடன் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் ஒரு தகவல் தொழில் நுட்பத் திட்டமாகும். இதனால், மக்கள் இணைய தளம் வழியாக, அரசின் சேவைகளை பெறமுடியும். மத்திய அரசின் தொலைத் தொடர்புத் துறை இத்திட்டத்தை 2021 மார்ச் 31ம் தேதிக்குள் தமிழ்நாட்டில் முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என காலக்கெடு நிர்ணயித்துள்ளது.
இதற்கிடையே,மத்திய அரசின் பாரத் நெட் திட்டத்தின் கீழ் அனைத்து கிராமங்களிலும் இணையதள வசதி ஏற்படுத்த பைபர் ஆப்டிக் அமைப்பது தொடர்பாக ரூ.2000 கோடி மதிப்பிலான டெண்டரை விடும் பணிகளை தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை செய்து வந்தது. இத்திட்டத்திற்காக, தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் கடந்த 2019 டிசம்பர் 5ம் தேதியன்று வலைதளம் மூலமாக ஒப்பந்தப்புள்ளி கோரியது.
அதன் பின்பு ஒப்பந்தப் புள்ளிக்கான முன்னோடி கூட்டம் கடந்த பிப்ரவரி 21ல் நடத்தப்பட்டது. குறிப்பிட்ட 2 நிறுவனங்களுக்கு மட்டும் ஒப்பந்தம் கிடைக்க பெறும் வகையில் விதிமுறைகள் மாற்றி முறைகேடு நடந்ததாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியது.
இந்நிலையில், ரூ.1,230 கோடியில் தமிழகத்தின் 12,524 கிராம ஊராட்சிகளை ஃபைபர் கேபிள் மூலம் இணைக்க திட்டமான பாரத் நெட் திட்டத்தின் டெண்டர் விதிகளை முறையாக பின்பற்றவில்லை என கூறி மத்திய வர்த்தக அமைச்சகம் ரத்து செய்துள்ளது. முறைகேடுகளை சரிசெய்து மீண்டும் டெண்டர் விட தமிழக அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.