புதிய உச்சம் தொட்ட பெட்ரோல், டீசல் விலை..வாகன ஓட்டிகள் அதிர்ச்சி..!
21வது நாளாக இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளதால், வாகன ஓட்டிகள் பரிதவித்து வருகின்றனர்.
சென்னை, ஜூன்-27

கொரோனா ஊரடங்கால் சென்னையில் கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தன. மே மாதத்தில் சர்வதேச அளவில் ஊரடங்கு தளர்வுகள் காரணமாக, பொருளாதார நடவடிக்கைகள் தொடங்கியதை அடுத்து கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து அதிகரிக்கத் தொடங்கியது. இதற்கேற்ப மத்திய அரசின் கலால் வரி உயர்வு, மாநில அரசின் மதிப்புக் கூட்டு வரி அதிகரிப்பு போன்றவற்றால் ஜூன் 7ம் தேதி முதல் பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்க ஆரம்பித்தது.
தொடர்ந்து தினமும் விலை அதிகரித்து வந்த நிலையில், 21வது நாளாக இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயா்த்தப்பட்டது. சென்னையில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை 22 காசுகள் அதிகரித்து ரூ.83.59-ஆகவும், ஒரு லிட்டா் டீசல் விலை 17 காசுகள் அதிகரித்து ரூ.77.61-ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு சனிக்கிழமை காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
கடந்த 20 நாள்களில், டீசல் விலை லிட்டருக்கு ரூ.11.02 வரை உயா்ந்துள்ளது. இதேபோல், பெட்ரோல் விலை 19 முறை உயா்த்தப்பட்டுள்ளது. இதனால், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 9.74 காசுகள் வரை உயா்ந்துள்ளது.
இதனால் வாகன ஒட்டிகள் பெரும் கவலைக்கு ஆளாகியுள்ளனர்.
இதேபோல் டெல்லியில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 80.38 ரூபாய்க்கும், டீசல் 80.40 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. பெங்களூரில் பெட்ரோல் 82.99 ரூபாய்க்கும், டீசல் 76.45 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. மும்பையில் பெட்ரோல் 87.14 ரூபாய்க்கும், டீசல் 78.71 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.