ஜூலை 15 வரை சர்வதேச பயணிகள் விமான சேவை ரத்து..!
கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் நடவடிக்கையாக, ஜூலை 15 வரை சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக, விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.
டெல்லி, ஜூன்-26

இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் 4 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தற்போது, இந்தியா முழுவதும் நகரங்களில் அட்டவணைப்படி இயக்கப்பட்டு வருகின்ற மின்சார ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. மேலும், இந்தியா முழுவதும் எக்ஸ்பிரஸ், பயணிகள் ரயில்கள், புறநகர் ரயில்கள் ஆகியவற்றின் சேவைகளும் வரும் ஆகஸ்டு மாதம் 12 ஆம் தேதி வரை ரத்து என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஜூலை 15-ந்தேதி வரை சர்வதேச விமான போக்குவரத்து கிடையாது என்று விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வருகிற ஜூலை 15 வரை சர்வதேச அளவில் திட்டமிடப்பட்டுள்ள அனைத்து பயணிகள் விமான சேவை ரத்து செய்யப்படுவதாகவும், அதே நேரத்தில் வெளிநாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வரும் ‘வந்தே பாரத்’ திட்டம் உள்ளிட்ட சிறப்பு விமான சேவை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சரக்கு சேவை விமானங்களுக்கு இந்த விதிமுறைகள் பொருந்தாது என்றும், சூழ்நிலைக்கு தகுந்தவாறு படிப்படியாக விமான சேவை பின்னர் அனுமதிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.