காவல்துறையினரால் பொதுமக்கள் தாக்கப்படுவது கொரோனா போன்ற மற்றொரு நோய் தொற்று.. உயர்நீதிமன்றம் கருத்து…!!

காவல்துறையினரால் பொதுமக்கள் தாக்கப்படுவது கொரோனா போன்ற மற்றொரு நோய் தொற்று என்று உயர்நீதிமன்றக் கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். உயர்நீதிமன்ற விசாரணையை பொதுமக்கள் குறைத்து எடைபோட்டு விட வேண்டாம் என்றும் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கில் உரிய நீதி வழங்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மதுரை, ஜூன்-26

கோவில்பட்டி கிளைச் சிறையில் விசாரணை கைதிகளாக இருந்த சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் அடுத்தடுத்து மரணம் அடைந்தனர். இதனை தொடர்ந்து, தந்தை, மகன் மர்மமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. அப்போது, குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்பின்னர் கருத்து தெரிவித்த நீதிபதிகள், விசாரணைக் கைதி மரணம் போன்ற சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என தெரிவித்தனர்.

தொடர்ச்சியாக கோவில்பட்டி கிளைசிறையின் பதிவேடுகள், மருத்துவ பதிவேடுகளை புகைப்படம் எடுத்து வைக்கவும், வழக்கு தொடர்பான அனைத்து சிசிடிவி பதிவுகளையும் சேகரித்து பாதுகாப்பாக வைக்கவும் கோவில்பட்டி நீதித்துறை நடுவருக்கு உத்தரவிட்டனர். இவ்வாறு உயிரிழந்த தந்தை – மகன் போலவே தாக்குதலுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படும் ராஜாசிங் என்பவர் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட நீதிபதி ஆய்வு செய்து தனியே அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இதற்காக காவல்துறையினருக்கு அரசு உரிய வழிகாட்டுதல்களை பிறப்பிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் விசாரணையின் போது காவல்துறையினரால் தாக்கப்படுவது கொரோனா போல மற்றொரு நோய்த்தொற்று, தந்தை மகன் இறந்த வழக்கில் உரிய நீதி வழங்கப்படும், நீதிமன்றத்தை குறைவாக மதிப்பிடவேண்டாம். கூடுதல் மன அழுத்தத்தில் காணப்படும் போலீசாருக்கு கவுன்சிலிங் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டத்துறை செயலர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு போலீசுக்கான வழிகாட்டுதல்கள் பிறப்பிக்கப்படும் எனக்கூறினர். மேலும் அனைத்து சிசிவிடி பதிவுகளையும் சேககரித்து பாதுகாப்பாக வைக்க கோவில்பட்டி நீதித்துறை நடுவருக்கு உத்தரவிடப்பட்டது. கோவில்பட்டி கிளைச்சிறையின் பதிவேடுகள், மருத்துவ பதிவேடுகளை புகைப்படம் எடுத்து வைக்கவும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை ஜூன் 30-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *