சீன நாட்டை சேர்ந்தவர்களுக்கு தங்கும் விடுதிகளில் அறை கிடையாது..டெல்லியில் அதிரடி அறிவிப்பு..!!
டெல்லியில் இனிமேல் சீன நாட்டை சேர்ந்தவர்களுக்கு தங்கும் விடுதிகளில் அறை வழங்கப்பட மாட்டாது என டெல்லி ஹோட்டல் மற்றும் தங்கும் விடுதிகள் உரிமையாளர்கள் சங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது.
டெல்லி, ஜூன்-25

இந்தியாவின் கிழக்கு லடாக் எல்லை கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த 15ம் தேதி நள்ளிரவில் இந்திய – சீன ராணுவ வீரர்கள் இடையே கடுமையான தாக்குதல் ஏற்பட்டது. இந்த தாக்குதலில் இந்திய தரப்பில் கர்னல் ஒருவர் உட்பட 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். எல்லையில் பதற்றமான சூழல் அதிகரித்த நிலையில், நேற்று இருநாட்டு படையினரும் எல்லைப் பகுதியில் இருந்து தங்களது படைகளை விலக்கிக் கொண்டதாக தெரிகிறது.
இதனையடுத்து இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழப்பிற்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் , சமூக ஆர்வலர்கள் அரசின் மீது கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் டெல்லி மாநிலத்தில் இனிமேல் சீன நாட்டை சேர்ந்தவர்களுக்கு தங்கும் விடுதிகளில் அறை வழங்கப்பட மாட்டாது என டெல்லி ஹோட்டல் மற்றும் தங்கும் விடுதிகள் உரிமையாளர்கள் சங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது. டெல்லி ஹோட்டல் மற்றும் தங்கும் விடுதிகள் உரிமையாளர்கள் சங்கத்தில் சுமார் 3000-க்கும் மேற்பட்ட ஹோட்டர் உரிமையாளர்கள் உள்ளனர். இந்த நிலையில் 5 நட்சத்திர ஹோட்டல் நிர்வாகங்களும் இந்த முடிவை எடுக்குமாறு தங்களது சங்கம் வலியுறுத்தும் என இந்த கூட்டுறவு சங்கத்தின் தலைவர் சந்தீப் கண்டேல்வால் தெரிவித்தார். அதே போன்று நாட்டின் இதர நகரங்களில் உள்ள ஹோட்டல்களிலும் சீனர்களுக்கு அறை கொடுக்கக் கூடாது என்பதற்கான செயல் நடவடிக்கைகளில் தங்களது சங்கம் ஈடுபடும் எனவும் அவர் கூறினார்.