எமர்ஜென்சி காலத்தில் ஜனநாயகத்தின் பாதுகாப்பிற்காக போராடிய மக்களின் தியாகத்தை நாடு மறக்காது…பிரதமர் மோடி ட்விட்..!!

நெருக்கடி நிலை காலத்தில் ஜனநாயகத்திற்காக போராடியவர்களின் தியாகத்தை நாடு மறக்காது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லி, ஜூன்-25

உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரலி தொகுதியில் இந்திரா காந்தி வெற்றி பெற்றது செல்லாது என்று அவரது எம்பி பதவியை பறித்து அலகபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் கடந்த 1975-ம் ஆண்டு ஜூன் 24ம் தேதி உறுதி செய்தது. எனினும் இந்திரா காந்தியை பிரதமராக தொடர உச்ச நீதிமன்றம் அனுமதித்தது.

அதற்கு மறு நாள் ஜூன் 25 ஆம் தேதி அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி, எமர்ஜென்சி எனப்படும் அவசரநிலையை நள்ளிரவில் பிரகடனம் செய்தார். 1977ம் ஆண்டு மார்ச் 21ம் தேதி வரை இது அமலில் இருந்தது. அந்த காலகட்டத்தில் பல எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். பத்திரிகை சுதந்திரம் முடக்கப்பட்டது. அவசர நிலை கொண்டு வரப்பட்டு இன்னுடன் 45 ஆண்டுகள் ஆகிறது.

இந்நிலையில், இந்தியாவில் 45 ஆண்டுகளுக்கு முன் நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்ட நாளை நினைவு கூறும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி, தனது டுவிட்டர் பக்கத்தில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

அதில், ‘45 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது. இந்தியாவின் ஜனநாயகத்தின் பாதுகாப்பிற்காக போராடிய மற்றும் சித்ரவதைகளை எதிர்கொண்ட மக்களுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன். அவர்களின் தியாகத்தை ஒருபோதும் நாடு மறக்காது’ என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, இந்தியாவில் 1975 முதல் 1977ம் ஆண்டு வரை எமர்ஜென்சி சட்டம் அமலில் இருந்த நாட்கள் ஒரு ‘இருண்ட காலம்’ என்று பிரதமர் மோடி விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

பாஜ முன்னாள் தேசிய தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, 45 ஆண்டுகளுக்கு முன் இந்த தேசத்தில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டது. ஒரு நாள் இரவில் இந்த தேசம் சிறைச்சாலையாக மாறியது. இந்த காலக்கட்டத்தில் பத்திரிகை, நீதிமன்றம், பேச்சு சுதந்திரம், அனைத்தும் காலில் போட்டு மிதிக்கப்பட்டன. ஏழைகள், விளிம்புநிலைச் சமூகத்தில் இருப்பவர்கள் மீது அட்டூழியங்களும், அடக்குமுறைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டன. பல லட்சம் மக்களின் மிகப்பெரிய முயற்சிகளால் தேசத்தில் அவசர நிலை நீக்கப்பட்டு, ஜனநாயகம் மீண்டது. ஆனால், இன்னும் காங்கிரஸ் கட்சியில் இன்னமும் ஜனநாயகம் இல்லாமல்தான் உள்ளது என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *