தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு – மருந்துக்கடைகள் 4 மணி நேரம் மூடல்..!

கோவில்பட்டி சிறையில் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை, மகன் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை ஒருநாள் கடையடைப்பு போராட்டம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளை காலை 7 மணி முதல் 11 மணி வரை மருந்துக் கடைகள் மூடப்படுவதாக மருந்து வணிகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சென்னை, ஜூன்-25

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவர், அங்குள்ள காமராஜர் சிலை அருகில் செல்போன் விற்பனைக்கடை நடத்தி வந்தார். கொரோனா வைரஸ் பரவி வருவதால் கடைகள் திறக்க பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கடந்த 19 தேதி, மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டியும்,கடையைத் திறந்து வைத்தது தொடர்பாக சாத்தான்குளம் காவல் நிலைய போலீசாருக்கும் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ்சுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து தந்தை மகன் இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது இருவரையும் கடுமையாக தாக்கியதாக தெரிகிறது. அவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து மறுநாள் காலையில் கோவில்பட்டி கிளை சிறையில் காவல்துறையினர் அடைத்தனர். இதில் இருவருக்குமே நெஞ்சுவலி ஏற்பட்டதால் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த பென்னிக்ஸ் சிகிச்சை பலனின்றி கடந்த 2 தினங்களுக்கு முன்பு மரணமடைந்தார். அதைத் தொடர்ந்து மறுநாள் காலையில் தந்தை ஜெபராஜூம் மரணமடைந்தார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தந்தை, மகன் மரணத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பிரேத பரிசோதனை முடிந்த பின்னரும் உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு ஒரு கோடி நிவாரணமும், அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தி வருகின்றனர். இதனையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, உயிரிழந்தவர்களுக்கு தலா பத்து லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தில் அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு தகுதிக்கேற்ப ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்றைய தினம் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் நெல்லையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறியதாவது;-

சாத்தான்குளம் வியாபாரிகள் மரணமடைந்ததற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகவும், குற்றவாளிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது என்ற செய்தியை முதல்வர் தெரிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தமிழகம் முழுவதும் இது போன்ற அநீதி வரும்காலத்திலும், எக்காலத்திலும் நடந்துவிடக்கூடாது என்பதை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் நாளை ஒருநாள் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறும்.நாளை மாலை 5 மணிக்கு அந்தந்த சங்கத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி கூட்டம் நடத்தப்படும் என்பதை தீர்மானமாக நிறைவேற்றியுள்ளோம். இந்த ஒரு நாள் கடையடைப்பு என்பது அடையாள கடையடைப்பு மட்டுமே. தொடர்ந்து, வரும் 30ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் நேரடியாக பேரமைப்பு நிர்வாகிகள் சென்று புகார் மனு அளிக்கும் அறப்போராட்டம் நடைபெறும். தமிழகம் முழுவதும் வணிகர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். பொதுமுடக்கம் நீக்கப்பட்ட பின்னர் வணிகர்கள், வியாபாரிகள் மீது எந்த கட்டுப்பாடும் விதிக்கக்கூடாது என்றும் கூறினார். எங்களது கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தீவிர போராட்டத்தில் ஈடுபடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தும் வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்புக்கு ஆதரவாக மருந்து கடைகளும் 4 மணிநேரம் கடைகளை அடைக்க மருந்து வணிகர்கள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு நடத்தும் வணிகர் சங்க பேரமைப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாளை 4 மணி நேரம் மட்டும் மருந்துக் கடைகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளதாக மருந்து வணிகர்கள் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *