சிபிஎஸ்இ மாணவர்களுக்கு நல்ல செய்தி சொன்ன மத்திய அரசு.. 10, 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து!

கொரோனா வைரஸ் காரணமாக சிபிஎஸ்இ தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

டெல்லி, ஜூன்-25

நாடு முழுவதும் உள்ள சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் பிப்ரவரி மாதம் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வும், மார்ச் மாதம் 10-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளும் தொடங்கியது. இந்நிலையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது ஒத்திவைக்கப்பட்ட 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளை ஜூலை 1 முதல் ஜூலை 15 வரை நடத்த சிபிஎஸ்இ முன்பு திட்டமிட்டிருந்தது.

இதனிடையே தற்போதைய சூழ்நிலையில் தேர்வுகளை ரத்து செய்யக் கோரி ஒரு மாணவரின் பெற்றோர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வில் மீதமுள்ள தாள்களைத் ரத்து செய்வது குறித்து பரிசீலிக்கவும், இன்டர்னல் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கவும் அறிவுறுத்தியது.

இந்நிலையில் சிபிஎஸ்இ தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநில அரசுகளிடம் இருந்து பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் முடிவு என மத்திய அரசு நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. சிபிஎஸ்இ தேர்வுகளை நடத்த இயலாது என தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் தெரிவித்ததாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது.

மத்திய அரசு மற்றும் சிபிஎஸ்இ தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘ஜூலை 1 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை நடைபெறவிருந்த 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. முந்தைய பருவத் தேர்வுகளின் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்க சிபிஎஸ்இ ஒப்புக்கொண்டுள்ளது. அதே நேரத்தில் 12 ஆம் மாணவர்களுக்கு மட்டும் ஒரு கூடுதல் வாய்ப்பு வழங்கப்படுகிறது. 12 ஆம் வகுப்பு மாணவர்கள் விரும்பும்பட்சத்தில், கொரோனா நிலைமை சரியானபின்னர் தேர்வுகளை எழுதிக் கொள்ளலாம்’ என்று தெரிவித்தார். மகாராஷ்டிரம், டெல்லி, தமிழகம், ஒரிசா உள்ளிட்ட மாநிலங்களில் கேட்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கம் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *