லாக்அப் மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்..நீதிபதிகள்

லாக்அப் மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் தெரிவித்தனர்.

மதுரை, ஜூன்-24

கோவில்பட்டியில் உள்ள கிளைச் சிறையில் விசாரணைக் கைதிகளாக இருந்த சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் அடுத்தடுத்து மரணம் அடைந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது. ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்தாக கூறி சாத்தான்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து, அடித்துக் கொன்றதாக உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். காவல்துறையை கண்டித்து தொடர் போராட்டம் நடைபெற்றது. இன்று தமிழ்நாடு முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

தந்தை, மகன் மர்மமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. அப்போது, தென்மண்டல ஐ.ஜி., தூத்துக்குடி எஸ்.பி. ஆகியோர் காணொலி மூலம் வழக்கு விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

இந்த சம்பவத்தில் காவல் உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் பணியிடை நீக்கம் செய்ப்பட்டிருப்பதாகவும், தலைமை காவலர்கள் முருகன், முத்துராஜ் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டிரப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதன்பின்னர் கருத்து தெரிவித்த நீதிபதிகள், லாக்அப் மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

‘விசாரணைக் கைதி மரணம் போன்ற சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். இதற்காக காவல்துறையினருக்கு அரசு உரிய வழிகாட்டுதல்களை பிறப்பிக்க வேண்டும்.

சாத்தான்குளம் சம்பவம் போல் தமிழகத்தில் இனி நடக்காமல் இருக்க டிஜிபி உத்தரவு பிறப்பிக்கலாம். மாஜிஸ்திரேட் விசாரணையில் எந்தவித குறுக்கீடும் இருக்க கூடாது. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், உடனடியாக வழக்குப்பதிவு செய்ய கூடாது.

தந்தை, மகன் மரணத்துக்கு உரிய நீதி வழங்கப்படும். உரிய நீதி வழங்கப்படும் என்பதை மக்களிடம் மாவட்ட நிர்வாகம் கொண்டு சேர்க்க வேண்டும்.

இந்த சம்பவம் தொடர்பாக கோவில்பட்டி நீதித்துறை நடுவர் விசாரணை அறிக்கை மற்றும் மாவட்ட எஸ்பி நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். பிரேத பரிசோதனையை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும். பிரேத பரிசோதனை அறிக்கையை சீலிட்ட கவரில் வைத்து தாக்கல் செய்ய வேண்டும். உடல்களை அடக்கம் செய்வதற்கு கொரோனா கட்டுப்பாடுகள் பொருந்தும்’ என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *