தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக ரூ.14.95 கோடி அபராதம் வசூல்..!

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 5,26,426 வாகனங்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை, ஜூன்-24

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25 முதல் வரும் 30ம் தேதி வரை ஊரடங்கு ஐந்து கட்டமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு நீடித்தாலும், கடந்த 1-ம் தேதி முதல் படிப்படியாக பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
ஆனால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும் கொரோனா தொற்று பரவுதல் குறையவில்லை. எனவே ஊரடங்கை மீறியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் ஊரடங்கை மீறியதாக நேற்று முன் தினம் காலை 6 மணி முதல் நேற்று காலை 6 மணி வரை 8,105 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் தொடர்புடைய 6,926 இருசக்கர வாகனங்கள், 215 ஆட்டோக்கள் மற்றும் 272 இலகு ரக வாகனங்கள் என மொத்தம் 7,413 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது இவ்வாறு காவல்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 7,14,850 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 6,57,112 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் ரூ. 14,95,23,610 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *