சாத்தான்குளம் சம்பவத்தால் கொந்தளித்த வணிகர்கள்.. இன்று தமிழகம் முழுவதும் கடையடைப்பு..!

கோவில்பட்டி சிறையில் அப்பா மகனின் மர்ம மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தமிழகம் முழுக்க கடையடைப்பு நடக்க உள்ளது.

சென்னை, ஜூன்-24

கோவில்பட்டி சிறையில் நேற்று அடுத்தடுத்து நிகழ்ந்த இரண்டு மர்ம மரணங்கள் தமிழகத்ததையே உலுக்கி உள்ளது. இது தொடர்பாக தீவிரமாக விசாரணை நடந்து வருகிறது. கோவில்பட்டி சிறையில் நிகழ்ந்த மர்மம் மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தென் மாவட்டங்களில் பல இடங்களில் போராட்டம் வெடித்துள்ளது. அங்கு நடக்கும் தொடர் போராட்டங்கள் காரணமாக தற்போது பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. மதுரை ஹைகோர்ட் கிளை தற்போது இந்த மரணம் குறித்த விசாரணையை கையில் எடுத்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு இருக்கும் காமராஜர் சிலை அருகில் செல்போன் கடை வைத்து நடத்தி வருபவர்தான் ஜெயராஜ். இவர் கடந்த 19ம் தேதி லாக்டவுன் நேரத்தையும் தாண்டி கடை வைத்து இருந்ததாக கூறி போலீசார் அவரை கைது செய்தன. சாத்தான்குளம் போலீசார் அவரை கைது செய்தனர்.

இந்த சம்பவம் நடந்த போது அங்கு இருந்த ஜெயராஜ் மகன் பென்னிக்ஸ் போலீசார் உடன் கடுமையான வாக்குவாதம் செய்தார். இதனால் போலீசார் அவரையும் கைது செய்தனர். அதன்பின் இவர்கள் கோவில்பட்டி கிளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால் சிறையில் அடைக்கப்பட்ட கொஞ்ச நேரத்தில் பென்னிக்ஸ் அங்கே மர்ம மரணம் அடைந்தார்.

அதன்பின் நேற்று காலை ஜெயராஜும் ஜெயிலேயே மர்ம மரணம் அடைந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுக்க பெரும் கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர்களின் பிரேத பரிசோதனை இன்று செய்யப்படும் என்று கூறுகிறார்கள். இவர்கள் இருவரும் வணிகர்கள் என்பதால் தமிழ்நாடு வணிகர் சங்கம் கடும் கொந்தளிப்பில் உள்ளது. தமிழ்நாடு வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன் தமிழகம் முழுக்க கடையடைப்பு போராட்டத்தை அறிவித்துள்ளார்.

பெனிக்ஸ், ஜெயராஜ் இருவரும் மர்ம மரணம் அடைந்து இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இதை கண்டிப்பாக தட்டி கேட்க வேண்டும். உடனே அந்த போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை எதிர்த்து நாங்கள் போராட்டங்களை முன்னெடுக்க போகிறோம். இதை கண்டித்து நாளை ஒரு நாள் தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடக்கும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *