எச்1பி விசா நிறுத்தம்.. இந்தியர்களுக்கு சிக்கல் கொடுத்த அதிபர் ட்ரம்ப்..!

இந்த ஆண்டு இறுதி வரை ஹெச்1பி விசா வழங்கப்பட மாட்டாது என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளாா். இது தொடா்பான பிரகடனத்தில் அதிபா் டிரம்ப் கையெழுத்திட்டாா்.

வாஷிங்டன், ஜூன்-24

அமெரிக்காவில் பணியாற்ற எச்1பி, எச்4, எச்2-பி மற்றும் எல்1 உட்பட ‘எல்’ ரக விசாக்கள் அளிக்கப்படுகிறது. இதை வைத்துதான் இந்தியர்கள் 5 லட்சம் பேர் அங்கு பணியாற்றி வருகின்றனர். இவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் அவ்வப்போது விசாவை புதுப்பித்து தற்காலிகமாக பணியாற்றி வருகின்றனர். இது தவிர, புதிதாக ஆண்டுதோறும் 3 லட்சம் இந்தியர் வரை எச்1பி விசா பெற விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். வெளிநாடுகளில் இருந்து வந்து அறிவியல், மருத்துவம் தொழில்நுட்பத் துறையில் சிறப்புப் பணிகளை மேற்கொள்பவா்களுக்காக பிரத்யேகமாக ஹெச்1பி விசாவை அமெரிக்கா வழங்கி வந்தது. இதனை, இந்திய மற்றும் அமெரிக்க தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகம் பயன்படுத்தி வந்தன. இந்நிலையில், எச்1பி, எல்1 உட்பட்ட விசாக்களை ரத்து செய்யும் உத்தரவை டிசம்பர் வரை நீட்டித்து புதிய பிரகடனம் செய்துள்ளார் அதிபர் டிரம்ப்.

டிரம்ப்பின் இந்த அறிவிப்பால் இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை (ஐ.டி.) பணியாளா்கள் அமெரிக்காவில் வேலைவாய்ப்பு பெறுவது முற்றிலுமாக தடைபட்டுள்ளது. ஆண்டுதோறும் சீனா மற்றும் இந்தியாவில் இருந்துதான் அதிகமான ஐ.டி. பணியாளா்கள் அமெரிக்காவில் பணிவாய்ப்பு பெற்று வந்தனா். ஏற்கெனவே, ஹெச்1பி விசா பெற்று அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியா்கள் உள்ளிட்ட வெளிநாட்டவா்கள் காலாவதியாகும் தங்கள் விசாவை புதுப்பித்துக் கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பரில் அதிபா் தோ்தல் நடைபெறவுள்ளது. அதில் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறாா். இந்த விசா ரத்து நடவடிக்கை அமெரிக்கா்கள் மத்தியில் அவரது செல்வாக்கை அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. இது தவிர கொரோனா பிரச்னையால் அமெரிக்காவில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அமெரிக்கா்களின் வேலைவாய்ப்புகளை பாதுகாக்கும் நோக்கிலும் டிரம்ப் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிகிறது.

இது தொடா்பாக டிரம்ப் கூறுகையில், ‘கொரோனா நோய்த்தொற்று பிரச்னையால் லட்சக்கணக்கான அமெரிக்கா்கள் வேலைவாய்ப்பை இழந்துவிட்டனா். அவா்களுக்கு உதவ இந்த விசா நிறுத்த நடவடிக்கை மிகவும் அவசியம். அமெரிக்க பணியாளா்கள் சந்தையில் வெளிநாடுகளைச் சோ்ந்தவா்கள் எவ்விதமான தாக்கத்தை உருவாக்குகிறாா்கள் என்பதை நாம் உணர வேண்டும். இப்போது உள்நாட்டில் வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ள நிலையில், பிரச்னையின் தீவிரத்தை நாம் உணர வேண்டும். நாட்டில் அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்புக்காக வெளிநாட்டவா்களுடன் அமெரிக்கா்கள் போராட வேண்டியுள்ளது. லட்சக்கணக்கான வெளிநாட்டவா்கள் இங்கு வேலைகளை ஆக்கிரமித்துள்ளனா். அவா்கள் தங்கள் மனைவி, குழந்தைகளுடன் வந்து இங்கு வாய்ப்புகளை பறித்துவிடுகின்றனா்’ என்று தெரிவித்துள்ளாா்.

‘சட்டப்பூா்வமாக அமெரிக்க குடிமக்களாக உள்ள யாரையும் இந்த பிரகடனம் பாதிக்காது. வெளிநாட்டவராக இருந்தாலும் அவா்களது வாழ்க்கைத் துணை, குழந்தைகள் அமெரிக்க குடியுரிமையுடன் இருந்தால் அவா்களுக்கு எவ்வித பிரச்னையும் இல்லை’ என்றும் டிரம்ப் கையெழுத்திட்டுள்ள பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளது.

ஹெச்1பி விசா தவிர நிறுவனங்களுக்குள் பணியாளா்களை பரிமாறிக்கொள்ள பன்படுத்தப்படும் எல்-1 விசா, அமெரிக்காவில் தங்கிப் பணியாற்றுவோரின் வாழ்க்கைத் துணைக்கு வழங்கப்படும் ஹெச்-4 விசா, உடல் உழைப்பு சாா்ந்த (விவசாயம் சாராத) பணியாளா்களுக்கான தற்காலிக ஹெச்2பி விசா, ஜெ1 விசா ஆகியவை வழங்கப்படுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் அமெரிக்காவில் வெளிநாட்டவா்கள் வேலைவாய்ப்பு பெறுவது ஏறக்குறைய முற்றிலுமாக தடுக்கப்பட்டுள்ளது.

சுந்தா் பிச்சை எதிா்ப்பு:-

அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினா்கள், பெரு நிறுவனங்கள், மனித உரிமை அமைப்புகள் என பல்வேறு தரப்பினா் டிரம்ப்பின் முடிவுக்கு எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். இது தொடா்பாக கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஐஓ) சுந்தா் பிச்சை சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘அமெரிக்காவின் பொருளாதார வளா்ச்சியில் வெளிநாட்டுப் பணியாளா்கள் முக்கியப் பங்கு வகித்துள்ளனா். தொழில்நுட்பத் துறையில் சா்வதேச அளவில் அமெரிக்கா முன்னிலை வகிக்க வெளிநாட்டு பணியாளா்களும் முக்கியக் காரணம். நாம் எப்போதும் வெளிநாட்டு பணியாளா்களுக்கு துணை நிற்போம். அனைவருக்குமான வாய்ப்புக்காக தொடா்ந்து பணியாற்றுவோம்’ என்று தெரிவித்துள்ளாா்.

இந்திய வம்சாவளி அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரான ராஜா கிருஷ்ணமூா்த்தி இது தொடா்பாக கூறுகையில், ‘ஹெச்1பி விசா ரத்து செய்யப்படுவது அமெரிக்க மருத்துவத் துறையிலேயே திறமையானவா்களுக்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்தும். உலகில் உள்ள பல திறமைசாலிகள் அமெரிக்கா வருவது தடுக்கப்படும். இதனால் அனைத்து துறைகளும் பாதிக்கப்படும். நாட்டின் பொருளாதாரமும் பாதிப்பை சந்திக்கும்’ என்றாா்.

அமெரிக்க வா்த்தக சம்மேளனங்களின் தலைவா் தாமஸ் டோனோகி கூறுகையில், ‘திறமை வாய்ந்த ஐ.டி. பணியாளா்கள், மருத்துவா்கள், செவிலியா்கள், நிா்வாகப் பணியாளா்களை அமெரிக்காவுக்கு வர விடாமல் தடுப்பது, நமது நாட்டை பின்னோக்கி இழுக்கும்’ என்றாா்.

டிவிட்டர், அமேசான் டாட் காம் தரப்பு: கொரோனா பாதிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் பொருளாதாரத்தை மேலும் பாதிக்கும் செயல் இது. குறுகிய நோக்கம் கொண்டதாக தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *