கொரோனாவை குணப்படுத்தும் என பதஞ்சலி அறிமுகம் செய்த மருந்துக்கு மத்திய அரசு தடை.. விளக்கம் அளிக்க உத்தரவு..!

கொரோனாவை குணப்படுத்தும் எனக்கூறி பாபாராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் அறிமுகம் செய்த மருந்துக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. பதஞ்சலி நிறுவனம் மருந்து விளம்பரத்தை நிறுத்த மத்திய ஆயுஷ் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பெயர், மருந்தின் கலவை பற்றிய விபரங்களை பதஞ்சலியிடம் கேட்கப்பட்டுள்ளது.

டெல்லி, ஜூன்-24

உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ், இதற்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள், மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் பிரபல யோகா குரு ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் கொரோனாவுக்கு தடுப்பு மருந்தை 7 நாட்களில் கண்டுபிடித்துவிட்டதாக தெரிவித்தது.

இது தொடர்பாக பாபா ராம்தேவ் கூறியதாவது; நாங்கள் கண்டுபிடித்திருக்கும் மருந்தின் பெயர் கொரோனில் ஸ்வாசரி. டில்லி, ஆமதாபாத் உள்ளிட்ட நகரங்களில் மொத்தம் 280 கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களுக்கு என்.ஐ.எம்.எஸ். என்ற பல்கலைக் கழகத்தின் உதவியுடன் நாங்கள் நோயாளிகளுக்கு எங்களது மருந்தை கொடுத்து ஆய்வு செய்தோம். அனைவருமே 100% குணமடைந்துவிட்டனர். கொரோனா தடுப்பு மருந்தை உலக நாடுகள் இன்னமும் கண்டுபிடிக்கவில்லை. இந்த தருணத்தில் எங்களது நிறுவனம் மருந்து தயாரித்திருப்பதை பெருமையாக கொள்கிறோம் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் கொரோனாவிற்கு தனது பதஞ்சலி நிறுவனம் ஆயுர்வேத மருந்து கண்டுபிடித்து விட்டதாக செய்து வரும் விளம்பரத்தை நிறுத்துமாறு, யோகா குரு பாபா ராம்தேவுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகளை அடுத்து, மத்திய ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

கொரோனாவிற்கு பதஞ்சலி நிறுவனம் ஆயுர்வேத மருந்து கண்டுபிடித்து விட்டதாக, ஊடகங்களில் வெளியாகும் செய்தி குறித்தும் அதன் உண்மைத்தன்மை குறித்தும் அறிந்து கொள்வதற்காக, கீழ்காணும் தகவல்களை உடனே அளிக்குமாறு பதஞ்சலி நிறுவனம் கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.

கொரோனாவை குணப்படுத்துவதாகக் கூறப்படும் மருந்தின் பெயர் மற்றும் அதன் உள்ளீட்டுப் பொருள்கள், இதற்கான ஆராய்ச்சி நடைபெற்ற மருத்துவமனை அல்லது வேறு இடம் குறித்த விபரங்கள், செய்முறை, சோதனைக்கு எடுத்துக் கொள்ளபட்டோரின் விபரங்கள், பரிசோதனை தர நிர்ணயக் குழுவின் அனுமதி மற்றும் தொடர்புடைய இதர அமைப்புகளின் அனுமதி குறித்த விபரங்கள், சோதனை முடிவுகளின் முழுமையான அறிக்கைகள் ஆகியவற்றை வேண்டுகிறோம்.

இதுகுறித்து முழுமையாக ஆராய்ந்து தெரிவிக்கும் வரை, கொரோனாவிற்கு தனது பதஞ்சலி நிறுவனம் ஆயுர்வேத மருந்து கண்டுபிடித்து விட்டதாக விளம்பரம் செய்யக் கூடாது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *