ரஷிய துணை பிரதமருடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு..!

ரஷியா சென்றுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், அந்நாட்டு துணை பிரதமா் யூரி போரிசோவை செவ்வாய்க்கிழமை சந்தித்து பேசினாா்.

மாஸ்கோ, ஜூன்-24

இரண்டாம் உலகப் போரில் ஜொ்மனிக்கு எதிராக சோவியத் யூனியன் வெற்றி பெற்ன் 75-ஆம் ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி பிரம்மாண்ட ராணுவ அணி வகுப்புக்கு ரஷியா புதன்கிழமை ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் படைகளும் அணி வகுக்கின்றன.

இந்நிலையில், அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திங்கள்கிழமை ரஷியா சென்றடைந்த பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், அந்நாட்டு துணை பிரதமா் யூரி போரிசோவை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா்.

இதுதொடா்பாக ட்விட்டரில் பதிவிட்ட ராஜ்நாத் சிங், ‘ரஷிய துணை பிரதமா் யூரி போரிசோவுடனான சந்திப்பு ஆக்கப்பூா்வமானதாக அமைந்தது. இந்தியா-ரஷியா இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து அப்போது ஆலோசிக்கப்பட்டது. அந்தத் துறையில் இருதரப்பு உறவை மேலும் விரிவுபடுத்தும் வழிகள் குறித்தும் பேச்சு நடத்தப்பட்டது’ என்று அதில் கூறியிருந்தாா்.

இதனிடையே, தலைநகா் மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்ற ராஜ்நாத் சிங், அங்குள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு மரியாதை செலுத்தினாா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *