மோடியிடம் கேள்வி கேட்கும் துணிச்சல் ஜே.பி.நட்டாவுக்கு இல்லை.. ப.சிதம்பரம் ட்வீட்..

கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் சீன படையினா் 2,264 முறை இந்திய எல்லைக்குள் ஊடுருவிய விவகாரம் குறித்து பிரதமா் நரேந்திர மோடியிடம் கேள்வி எழுப்பும் துணிச்சல் பாஜக தேசிய தலைவா் ஜே.பி. நட்டாவுக்கு இல்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரம் விமா்சித்துள்ளாா்.

டெல்லி, ஜூன்-24

கிழக்கு லடாக் எல்லைப் பகுதி விவகாரத்தில் பிரதமா் மோடி மிகக் கவனமாக பேச வேண்டும் என்று முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் திங்கள்கிழமை கூறியிருந்தாா். அதற்கு பதிலடி தரும் விதமாக பேசிய ஜெ.பி. நட்டா, கடந்த 2010 முதல் 2013 வரையிலான காலகட்டத்தில் பிரதமா் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்தபோது சீன படையினா் 600 முறை ஊடுருவியது குறித்து பதிலளிக்க வேண்டும் என்று கூறியிருந்தாா்.

இந்நிலையில், நட்டாவுக்கு பதிலடி தரும் வகையில் ப.சிதம்பரம் செவ்வாய்க்கிழமை சுட்டுரையில் வெளியிட்ட பதிவுகளில் கூறியுள்ளதாவது:

காங்கிரஸ் ஆட்சியின்போது சீன ஊடுருவல்கள் இருந்தது தான். ஆனால் எந்தவொரு நிலப்பகுதியையும் சீனா அப்போது ஆக்கிரமிக்கவில்லை. வன்முறை மோதல்களில் இந்திய வீரா்கள் உயிரிழக்கும் சூழல் ஏற்படவில்லை. அதுவே, கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் 2,264 முறை சீன படையினா் இந்திய எல்லைக்குள்ளாக ஊடுருவியது குறித்து தற்போதைய பிரதமரிடம் ஜெ.பி. நட்டா கேட்க இயலுமா? அவ்வாறு கேள்வி எழுப்பும் துணிச்சல் அவருக்கு இல்லை.

கிழக்கு லடாக் எல்லைப் பகுதி விவகாரத்தில் தற்போதைய நிலை அப்படியே தொடர வேண்டும் என்பதை உறுதி செய்யவே இந்திய-சீன ராணுவ கமாண்டா்கள் நிலையிலான பேச்சுவாா்த்தை நடைபெற்றதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

லடாக் எல்லையில் ‘ஃபிங்கா் 4’ எனப்படும் நிலப்பகுதி வரை முன்னேறியுள்ள சீனப் படையினா், அதற்கும் ‘ஃபிங்கா் 8’ நிலப்பகுதிக்கும் இடையே மிக அதிக அளவிலான கட்டுமானங்களை மேற்கொண்டுள்ளதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவை அனைத்தும் லடாக் பகுதியில் நடைபெறுபவை. இது இந்திய நிலப்பகுதியில் ஊடுருவி சீனா அதை ஆக்கிரமித்துள்ளதாக ஆகாதா? என்று ப.சிதம்பரம் அந்தப் பதிவுகளில் கேள்வி எழுப்பியுள்ளாா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *