தந்தை, மகன் உயிரிழப்பு.. தமிழகம் முழுவதும் நாளை முழு கடையடைப்பு

தூத்துக்குடியில் 2 வணிகர்கள் உயிரிழந்ததை கண்டித்து தமிழகத்தில் நாளை கடைகள் அடைக்கப்படும் என வணிகா் சங்கப் பேரவைத் தலைவா் வெள்ளையன் தெரிவித்துள்ளார்.

கோவில்பட்டி, ஜூன்-23

சாத்தான்குளத்தில் மொபைல் கடை நடத்தி வருபவர் பென்னிங்ஸ் (31). கடந்த 20-ம் தேதி ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்தது தொடர்பாக போலீசார் பென்னிங்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் இருவர் மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்து கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்துள்ளனர்.

இதற்கிடையே, கோவில்பட்டியில் உள்ள கிளைச் சிறையில் விசாரணைக் கைதியாக இருந்த பென்னிங்ஸுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறைக் காவலர்கள் அவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார். மகன் பென்னிக்ஸ் நேற்றிரவு உயிரிழந்த நிலையில் தந்தை ஜெயராஜ் இன்று காலை உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கோவில்பட்டி கிளை சிறையில் விசாரணை கைதியாக இருந்த தந்தை, மகன் அடுத்தடுத்து உயிரிழந்த விவகாரத்தில் 2 எஸ்.ஐ.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.

கோவில்பட்டி கிளைச் சிறையில் தந்தையும், மகனும் அடுத்தடுத்து இறந்திருப்பது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் கோவில்பட்டி கிளைச்சிறையில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து தமிழகத்தில் நாளை முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் அறிவித்துள்ளார். மேலும் கோவில்பட்டி சிறையில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திய வெள்ளையன், அவர்களது குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி நிதி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *