ஜோகோவிச்சுக்கு கொரோனா.. டென்னிஸ் உலகம் அதிர்ச்சி..!

பிரபல டென்னிஸ் வீரர் நோவாக் ஜோக்கோவிக்குக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் டென்னிஸ் உலகம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

ஜூன்-23

கொரோனா பரவல் அதிகமாக இருக்கும் நிலையிலும் சில நாடுகளில் விளையாட்டுப் போட்டிகள் மீண்டும் தொடங்கியுள்ளன. பிரபல வீரர் ஜோகோவிச், அட்ரியா டூர் என்கிற கண்காட்சி டென்னிஸ் ஆட்டங்களை செர்பியாவிலும் குரோசியாவிலும் நடத்தினார். இப்பகுதிகளில் பல ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் விளையாடிய பிரபல டென்னிஸ் வீரர் டிமிட்ரோவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு முதலில் ஏற்பட்டது. இத்தகவலைச் சமூகவலைத்தளங்களில் அவர் தெரிவித்தார். தரவரிசையில் 19-வது இடத்தில் உள்ள டிமிட்ரோவ், மூன்று முறை கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் அரையிறுதி வரை முன்னேறியுள்ளார். ஞாயிறன்று, பிரபல வீரர் ஜோகோவிச்சுடன் டிமிட்ரோவ் விளையாடவிருந்த நிலையில் கொரோனா காரணமாக அப்போட்டியிலிருந்து விலகினார். இதையடுத்து அட்ரியா டூரின் மீதமுள்ள ஆட்டங்களும் ரத்து செய்யப்பட்டன.

அட்ரியா டூர் கண்காட்சி டென்னிஸ் ஆட்டங்கங்களில் பங்கேற்ற மற்றொரு வீரரான போர்னா கோரிக், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார். மேலும், போட்டியில் பங்கேற்ற விக்டோர் டிராய்க்கியும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரர் ஜோகோவிச், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். செர்பியாவிலிருந்து திரும்பிய பிறகு ஜோகோவிச்சின் குடும்பத்துக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஜோகோவிச்சும் அவருடைய மனைவியும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. எனினும் ஜோகோவிச்சின் மகன், மகள் ஆகிய இருவருக்கும் நெகடிவ் என முடிவு வந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் ஜோகோவிச் பாதிக்கப்பட்டுள்ளதால் டென்னிஸ் உலகம் அதிர்ச்சியடைந்துள்ளது.

இந்தப் போட்டித் தொடரில் பங்கேற்ற வீரர்கள் யாருமே சமூக விலகலை கடைப்பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 14 நாள் ஜோகோவிச்சும் அவரது மனைவியும் சுய தனிமைக்குட்படுத்தப்பட்டுள்ளனர் . இந்த நிலையில் இந்த டென்னிஸ் தொடரால் யாருக்கேனும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதற்காக தான் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக ஜோகோவிச் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *