அதிமுக கூட்டணியில் இருந்து புதிய தமிழகம் கட்சி விலகலா ?

சென்னை, அக்டோபர்-08

இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து கூட்டணியில் இடம்பெற்றுள்ள புதிய தமிழகம் கட்சி எந்த ஒரு முடிவும் எடுக்காததால், அதிமுக கூட்டணியில் இருந்து புதிய தமிழகம் கட்சி விலகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதிமுக கூட்டணியில் உள்ள புதிய தமிழக கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, அண்மைக்காலமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. 6 பட்டியலினத்தவர் பிரிவுகளை ஒன்றாக இணைத்து தேவேந்திர குல வேளாளர் என அரசாணை வெளியிடக்கோரி தமிழக அரசுக்கு பலமுறை புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்து வந்தார்

ஆனால், கிருஷ்ணசாமியின் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்காததால், அதிமுக-புதிய தமிழகம் கட்சிகளுக்கு இடையேயான கூட்டணியில் விரிசல் ஏற்படத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், நாங்குநேரி தொகுதியில் புதிய தமிழக கட்சியின் ஆதரவை பெற அதிமுக முயற்சித்தது.

அதிமுகவின் அமைச்சர்கள் கிருஷ்ணசாமியை சந்தித்து பேசிய நிலையில், அவர் ஆதரவு அளிக்க முடியாது எனக் கூறியுள்ளார். தேவேந்திர குல வேளாளர் என்ற பெயரில் அரசாணை வெளியிட தாமதம் செய்வதால் அவர் ஆதரவு அளிக்க மறுத்துள்ளார். இதனிடையே தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் ஜான்பாண்டியனும் தனது ஆதரவை தெரிவிப்பது பற்றி ஆலோசித்து விட்டுச் சொல்கிறேன் எனக்கூறியுள்ளார். இது, அதிமுக தலைமைகளுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *