மதுரையில் நாளை முதல் 30ஆம் தேதி வரை முழு பொதுமுடக்கம்..!

மதுரையில் நாளை முதல் ஜூன் 30-ம் தேதி வரை முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை, ஜூன்-22

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் வருகிற 30-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் நேற்று எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதேபோல், வருகிற 28-ந்தேதியும் எந்தவித தளர்வும் இல்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சென்னை உள்பட 4 மாவட்டங்களில் முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மதுரையிலும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் மட்டும் நேற்று வரை 705 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மதுரை மாவட்டம் முழுவதும் நாளை காலை 6 மணி முதல் 30ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மதுரை மாவட்டத்தில் கடைகள் திறக்கப்படும் நேரத்தை குறைக்க அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை மறுநாள் முதல் காலை 6 முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே கடைகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழக அரசு அறிக்கையில் கூறியதாவது;

* மதுரை மாநகராட்சி பகுதிகளிலும், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு ஊரகப் பகுதிகளில் முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் ஊரகப் பகுதிகளிலும் முழு முடக்கம் அமலில் இருக்கும்.

* உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பார்சல் வழங்க மட்டுமே அனுமதி.

* போனில் உணவுகளை ஆர்டர் செய்து டோர் டெலிவரி செய்வதற்கும் தமிழக அரசு அனுமதி.

* பணிகள் நடைபெறும் இடத்திலேயே தொழிலாளர்கள் தங்கிருந்தால் கட்டுமான பணிகளுக்கும் அனுமதி.

* ரேசன் கடைகள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும்.

* தள்ளுவண்டிக் கடைகளில் காய்கறி, பழங்களை விற்பனை செய்ய காலை 6 மணி முதல் 1 மணி வரை அனுமதி.

* அத்தியாவசியப் பொருள்களை மக்கள் நடந்து சென்றே வாங்க வேண்டும். ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் இருக்கும் கடைகளுக்குச் சென்று பொதுமக்கள் அத்தியாவசியப் பொருள்களை வாங்கலாம்.

* வரும் 28-ம் தேதி தளர்வுகள் இல்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.

* அம்மா உணவகங்கள், சமுதாயக் கூடங்கள் இயங்க அனுமதி உண்டு. ஆட்டோ, டாக்ஸி போன்ற வாகனங்களுக்கு அனுமதி கிடையாது, மருத்துவ அவசர வாகனங்கள் இயங்க மட்டுமே அனுமதி உண்டு.

* தேநீர் கடைகளுக்கு அனுமதி கிடையாது. பொதுமுடக்கம் ஜூன் 30 ஆம் தேதி வரை அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *