ராணுவ வீரர்களின் தியாகத்திற்கு நியாயம் கிடைக்காவிடில் அது வரலாற்று துரோகம்.. மன்மோகன் சிங்

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்த சம்பவத்தில், ராணுவ வீரர்களின் தியாகத்திற்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்காவிடில் அது வரலாற்று துரோகம் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கருத்து கூறியுள்ளார்.

டெல்லி, ஜூன்-22

இது தொடர்பாக மன்மோகன் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், நமது எல்லைப் பகுதியைப் பாதுகாக்க, கலோனல் பி. சந்தோஷ் பாபு உள்பட நமது வீரர்கள் செய்த உயிர்த் தியாகத்துக்கு பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய அரசும் நிச்சயம் நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாமல், அதற்கு எந்த வகையில் குறைபாடு ஏற்பட்டாலும், அது மக்களின் நம்பிக்கைக்கு செய்த வரலாற்றுத் துரோகமாகிவிடும். உண்மையான தகவல்களை மறைப்பது, ராஜதந்திரமாகவோ, நல்ல தலைமையாகவோ இருக்காது என்பதை மத்திய அரசு நினைவில் கொள்ள வேண்டும் என்று மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில், நாம் வரலாற்றின் இரண்டு சாலைகள் சந்திக்கும் இடத்தில் நிற்கிறோம், நமது அரசின் முடிவுகளும், நடவடிக்கைகளுமே, எதிர்கால சந்ததியினர், நம்மை எப்படி புரிந்து கொள்ளப் போகிறார்கள் என்பதற்கு அடிப்படையாக அமையும். நம்மை வழிநடத்துபவர்கள், மிகப் புனிதமான ஒரு சுமையை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். நமது ஜனநாயக அமைப்பு, அந்தக் கடமையை பிரதமர் அலுவலகத்துக்கு அளித்துள்ளது. எனவே, பிரதமர் பதவியில் இருப்பவர்கள், மிகவும் கவனத்துடன் வார்த்தைகளைக் கையாள வேண்டும், குறிப்பாக நமது நாட்டின் பாதுகாப்பு மற்றும் கொள்கைகள், எல்லை விவகாரங்கள் குறித்து பேசும்போது என்று மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவின் இந்த அச்சுறுத்தலுக்கு எதிராக நாம் அனைவரும் ஒற்றுமையோடு இருக்க வேண்டியது அவசியம். சீன விவகாரம் தொடர்பாக தவறான தகவல் தருவது சிறந்த தலைமைக்கு அழகல்ல. சீனாவின் நிலையை உறுதிப்படுத்தும் வகையில் பிரதமரின் வார்த்தைகள் அமைந்துவிடக்கூடாது என்றும் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *