அடுத்த 24 மணிநேரத்தில் திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!
நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, ஜூன்-22

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று கூறியுள்ளதாவது:-
தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச் சலனத்தின் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
திருநெல்வேலி தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், அடுத்த 48 மணி நேரத்திற்கு தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியசும் குறைந்த பட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.
தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள், கர்நாடகா கேரளா கடல் பகுதிகள், தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதி, மத்தியகிழக்கு அரபிக் கடல் பகுதி, வடகிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டிய குஜராத் கடலோர பகுதிகளில் அடுத்த நான்கு நாட்களுக்கு சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் அந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.