சென்னையில் 1.20 லட்சம் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு..! ஆணையர் பிரகாஷ் பேட்டி..!!

சென்னையில் 1.20 லட்சம் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களாக உள்ளன என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னை, ஜூன்-22

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு உச்சத்தை எட்டி வருகிறது. தினமும் சென்னையில் மட்டும் நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கடந்த 19-ம் தேதி முதல் வருகிற 30ம் தேதி வரை 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து சென்னை ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், சென்னையில் 1.20 லட்சம் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களாக உள்ளன. தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் உள்ளோருக்கு உதவ சுமார் 4 ஆயிரம் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வீடு வீடாகச் சென்று காய்ச்சல் பரிசோதனை செய்யும் பணியில் 11 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர். 200 வார்டுகளை கொண்ட சென்னை மாநகராட்சியில் ஒவ்வொரு வார்டிலும் தலா 2 மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. மேலும், மருத்துவ முகாம்கள் மூலம் சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மருத்துவ முகாம்களின் மூலம், உடல் வெப்பநிலை, ஆக்சிஜன் போன்றவை கணக்கிடப்படுகிறது. சென்னையில் நாள் ஒன்றுக்கு 30,000ஐ பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. ஏழை, குடிசைப்பகுதி மக்களுக்காக ஆட்டோக்களில் விழிப்புணர்வு ஏற்பட்டுத்தப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *