பல வங்கிகள் இணைப்பு,இனி 12 வங்கிகள் மட்டுமே – நிர்மலா சீதாராமன்
டெல்லி ஆகஸ்ட் 30
இந்தியன் வங்கி,ஆந்திரா வங்கி உள்ளிட்ட பல வங்கிகள் இணைக்கப்படும் என்று தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,இனி 12 பொதுத்துறை வங்கிகள் மட்டுமே இருக்கும் என்று அதிரடியாக தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் மத்தியயமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
வங்கிக் கடனை கட்டி முடித்த 15 நாட்களுக்குள் கடன் பத்திரங்கள் திருப்பித் தரப்படும். கடன் வழங்கும் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து வங்கிகள் அறிக்கை தந்துள்ளன.தொழில்துறை ஊக்குவிப்பு நடவடிக்கைகள் தொடரும். 8 வங்கிகள் ரிசர்வ் வங்கிக்கு நிகரான வட்டிச் சலுகைகளை அளித்து வருகின்றன.வீட்டுக் கடனுக்கு ரூ.3,300 கோடி கடன் உதவி அளிக்கப்படும்.
வாராக் கடன் அளவு கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது, ரூ.75 ஆயிரம் கோடி அளவுக்கு வாராக் கடன் வசூலிக்கப்பட்டுள்ளது.
நீரவ் மோடி போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் தொடராமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். வங்கிகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நிபுணத்துவம் வாய்ந்தவர்களை வங்கிகளின் உயர் பதவிக்கு நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடன் வசூலில் சாதனை படைத்துள்ளோம்.
வங்கி நிர்வாகத்தில் அரசின் தலையீடு துளி கூட இல்லை. ரூ.30 ஆயிரம் கோடி கடன் வழங்க அரசு தயாராக உள்ளது.
பஞ்சாப் வங்கி, ஓரியண்டல் வங்கி, யுனைடெட் வங்கிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தென்னிந்தியாவில் கனரா வங்கி, சிண்டிகேட் வங்கிகள் இணைக்கப்படும். ஆந்திரா வங்கி, யூனியன் வங்கி, கார்ப்பரேஷன் வங்கியும் இணைக்கப்படும். இதேபோல், இந்தியன் வங்கி, அலகாபாத் வங்கி இணைக்கப்படும்.
வங்கிகள் இணைக்கப்படுவதால் இனி 12 பொதுத்துறை வங்கிகள் மட்டுமே இயங்கும். 7 வங்கிகளில் 82% வர்த்தகம் நடைபெற்று வருகிறது.செலவினங்களைக் குறைக்கவும், அதிக அளவில் வங்கி சேவையை அளிக்கவும் திட்டமிட்டுள்ளோம். உலக அளவில் இந்திய வங்கிகள் விரிவடைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.