4 மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த ஜூலை 15 வரை அவகாசம்..!

பொது முடக்கம் அமலில் உள்ள சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த ஜூலை 15 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை, ஜூன்-20

இதுகுறித்து தமிழ்நாடு மின்வாரியம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது ;-

  1. கோவிட் 19 பரவுதலால் 24.03.2020 நள்ளிரவு முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. தற்பொழுது தமிழ்நாடு அரசு ஊரடங்கினை மேலும் 30.06.2020 வரை சில கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் நீட்டித்து உத்திரவிட்டுள்ளது.
  2. இதனை தொடர்ந்து தற்பொழுது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் 15.06.2020 அன்று செய்திக்குறிப்பு எண் 90 வாயிலாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளுர் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு 19.06.2020 முதல் 30.06.2020 வரை சில அத்தியாவசிய பணிகள் நீங்கலாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
  3. இதைத் தொடர்ந்து மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலினாலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளுர் ஆகிய நான்கு மாவட்டங்களில் 25.03.2020 முதல் 14.07.2020 வரை மின்கட்டணம் செலுத்த கடைசி தேதி உள்ள LT /LTCT மின்நுகர்வோர்கள் தங்களது மின்கட்டணத்தை 15.07.2020 வரை தாமத மின்கட்டணம் மற்றும் மறுமின்இணைப்பு கட்டணமின்றி செலுத்தலாம் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது, மற்றும் 15.07.2020 வரை மின் இணைப்புகளை துண்டிக்க வேண்டாம் என்றும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  4. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளுர் ஆகிய நான்கு மாவட்டங்களில் 19.06.2020 முதல் 30.06.2020 வரை மின் கணக்கீட்டு தேதி உள்ள தாழ்வழுத்த (LT /LTCT) மின்நுகர்வோர்களுக்கு அதற்கு முந்தைய மாத மின் கணக்கீட்டு பட்டியல்படி மின்கட்டணம் கணக்கிடப்படும் என தெரிவிக்கப்படுகிறது (அதாவது LT நுகர்வோர்களுக்கு பிப்ரவரி 2020/ LTCT நுகர்வோர்களுக்கு மே 2020 ஆகிய மாதங்களில் செலுத்திய தொகையை ஜுயஅயீ;ன் 2020 மாத மின்கட்டணமாக கணக்கிடப்படும்).
  5. தமிழக அரசின் உத்தரவுபடி வங்கிகள் செயல்படாது என்பதால் வங்கியில் இருசால் செய்யும் வசதிகள் இல்லை என்பதனை கருத்தில் கொண்டும், பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியத்தினை கருத்தில் கொண்டும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளுர் ஆகிய நான்கு மாவட்டங்களில் மின்கட்டண வசூல் மையங்கள் 19.06.2020 முதல் 30.06.2020 வரை செயல்படாது என தெரிவிக்கப்படுகிறது.
  6. மேலும், மின்நுகர்வோர்கள் ஏற்கனவே பயனீட்டாளர்களுக்கு
    வழங்கப்பட்டுள்ள இணையதள வழிகளான வலையதள வங்கியியல், தொலைபேசி வங்கியியல், பேமெண்ட் கேட்வே, பிபிபிஎஸ் (BBPS)) ஆகியவை மூலம் 19.06.2020 முதல் 30.06.2020 வரையுள்ள காலத்தில் மின்கட்டணம் செலுத்த பயன்படுத்துமாறு கனிவுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *