அசுரன்: வெற்றிமாறனை நெருக்கும் தேவர் அமைப்புகள்

சென்னை, அக்டோபர்-08

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சுவாரியர், ஆடுகளம் நரேன், உள்ளிட்டோர் நடித்த அசுரன் படம் கடந்த வாரம் வெளியானது. அனைத்து தரப்பு மக்களாலும் வெகுவாக பாராட்டைப் பெற்றுவரும் அசுரன் படத்துக்கு சாதி ரீதியாக தற்போது, எதிர்ப்பு உருவாகியுள்ளது.

அசுரன் படத்தின் கதை பின்னணி:

அசுரன் படத்தில் சிவசாமி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள தனுஷ், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவராக நடித்திருக்கிறார். இப்படத்தில், தனுஷ் கதாபாத்திரத்தை மற்றொரு சமூகத்தை சேர்ந்த ஒருவர் ஒடுக்குவது போலவும், இதற்கு எதிராக தனுஷ் பதிலடி கொடுத்து பழிவாங்குவது போன்றும் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஆண்ட பரம்பரை என்ற வார்த்தை ஒரு குறிப்பிட்ட இடத்தில் வசனத்தோடு சேர்க்கப்பட்டுள்ளது.

தேவர் அமைப்புகள் எதிர்ப்பு:

ஆண்ட பரம்பரை என்ற வார்த்தை இப்படத்தில் இடம்பெற்றுள்ள விதத்திற்கு தேவர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. சாதிய மோதலையும், சாதிய வன்மத்தையும் விதைக்கும் வகையில் திணிக்கப்பட்டுள்ள வசனங்களை நீக்காவிட்டால் திரையரங்கு முன்பு போராட்டம் நடத்தப்படும் என்று தேவர் அமைப்புகள் எச்சரித்துள்ளன.

வசனத்தை நீக்க வெற்றிமாறன் ஒப்புதல்:

ஆண்ட பரம்பரை வசனம் தொடர்பாக தேவர் அமைப்புகளை சேர்ந்தவர்கள் அந்த படத்தின் இயக்குநர் வெற்றிமாறனுக்கு தொடர்ச்சியாக தொலைபேசியில் அழைத்து விளக்கம் கேட்டு வருகின்றனர். சிலர் மிரட்டும் தொணியிலும் பேசி வருகின்றனர். இதனையடுத்து, சர்ச்சைக்குரிய அந்த வசனத்தை நீக்கப்போவதாக இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தொலைபேசியில் கேட்டவர்களுக்கும் இந்த பதிலையே வெற்றிமாறன் கூறியிருக்கிறார்.

தம்முடைய நோக்கம் எதுவும் கிடையாது என்றும் அந்த வார்த்தை தவறுதலாக வந்துவிட்டது என்றும் விளக்கமளித்துள்ள வெற்றிமாறன் இரு நாட்களில் அனைத்து திரையரங்குகளிலும் அந்த வார்த்தை நீக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். இதேபோன்று, வடசென்னை படத்திலும் சில காட்சிகளுக்கு எதிர்ப்பு வந்ததையடுத்து, அந்த காட்சிகளை வெற்றிமாறன் நீக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *