தமிழகத்தில் அக்டோபர் 1 முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்.. அமைச்சர் காமராஜ் பேட்டி..

தமிழகத்தில் அக்டோபர் 1ம் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டம் அமல்படுத்தப்படும் என உணவத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை, ஜூன்-20

‘ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு’ என்ற மத்திய அரசின் திட்டத்தின்கீழ் நாடு முழுமைக்கும் பொருந்தும் வகையிலான பொதுவான வடிவமைப்பில் ரேஷன் அட்டைகளை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. மாநில அரசுகள் அதே வடிவமைப்பு முறையைப் பின்பற்றி புதிய ரேசன் கார்டுகளை மக்களுக்கு வழங்க வலியுறுத்தியுள்ளது. முதல் கட்டமாக முன்னோட்ட அடிப்படையில் ஆறு மாநிலங்களில் தற்போது அமல்படுத்தியுள்ளது. வரும் 2020ம் ஆண்டு ஜூன் 1ம் தேதியிலிருந்து நாடு முழுமைக்கும் இந்த திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது.

இதற்கிடையே, தமிழகத்தில் பரிட்சார்த்த முறையில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய 2 மாவட்டங்களில் கடந்த 1.1.2020 முதல் 29.2.2020 வரை அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து, இந்த திட்டம் வருகிற ஏப்ரல் 1-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், இத்திட்டம் செயல்படுத்துவது தள்ளி சென்றுகொண்டே இருக்கிறது.

இந்நிலையில், திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த தமிழக உணவு பாதுகாப்பு துறை அமைச்சர் காமராஜ், அக்டோபர் 1-ம் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய அரசிடம் தெரிவித்துள்ளோம். திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு தூர்வார எடுத்துக்கொள்ளப்பட்ட பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டன என்றும் கூறினார்.

ஒரே நாடு, ஒரே ரே‌‌ஷன் கார்டு திட்டத்தின் மூலம், குடும்ப அட்டை (ரே‌‌ஷன் கார்டு) வைத்திருப்பவர்கள் எந்த மாநிலத்தில் உள்ள ரே‌‌ஷன் கடையிலும் சென்று பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம். குறிப்பாக ஒரு மாநிலத்தில் இருந்து புலம் பெயர்ந்து மற்றொரு மாநிலத்துக்கு செல்லும் தொழிலாளர்களுக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *