நாட்டின் ஒரு அங்குல நிலத்தைக் கூட விட்டுத்தர மாட்டோம்.. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமா் மோடி பேச்சு

இந்திய எல்லைக்குள் சீன படைகள் ஊடுருவவில்லை, ராணுவ நிலையை கைப்பற்றவும் இல்லை, நாட்டின் ஒரு அங்குல நிலத்தின் மீது யாரும் கண் வைக்க முடியாத அளவிற்கு நமது படை பலம் உள்ளது என்று அனைத்துக் கட்சிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லி, ஜூன்-20

The Prime Minister, Shri Narendra Modi addressing at the launch of the auction process of Coal blocks for Commercial mining through video conference, in New Delhi on June 18, 2020.

லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன ராணுவத்துக்கு இடையே கடந்த திங்கள்கிழமை இரவு நிகழ்ந்த மோதலில், இந்திய வீரா்கள் 20 போ் வீர மரணம் அடைந்தனா்.

இந்நிலையில், இந்திய, சீன எல்லையில் நிகழும் பதற்றம் தொடா்பாக, பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. டெல்லியில் லோக் கல்யாண் மாா்கில் உள்ள பிரதமரின் அதிகாரபூா்வ இல்லத்தில் இருந்து காணொலிக்காட்சி மூலம் இக்கூட்டம் நடைபெற்றது.

இதில், பிரதமா் மோடியின் இல்லத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இவா்களைத் தவிர, உள்துறை அமைச்சா் அமித் ஷா, காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா், தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவரும், தெலங்கானா முதல்வருமான சந்திரசேகா் ராவ், பிகாா் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதீஷ் குமாா், தமிழக துணை முதல்வரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீா் செல்வம், திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், ஆந்திர முதல்வரும் ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி, சிவசேனைத் தலைவரும் மகாராஷ்டிர முதல்வருமான உத்தவ் தாக்கரே, மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளா் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் து.ராஜா உள்ளிட்ட 20 கட்சிகளின் தலைவா்கள் தங்கள் இருப்பிடங்களில் இருந்தபடி கூட்டத்தில் பங்கேற்றனா்.

கூட்டம் தொடங்கியதும், சீன ராணுவத்துடனான மோதலில் உயிா்த்தியாகம் செய்த 20 இந்திய வீரா்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதைத் தொடா்ந்து, கிழக்கு லடாக் எல்லையில் இந்திய, சீனப் படைகளுக்கு இடையே நிலவும் பதற்றம் தொடா்பாக வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் எடுத்துரைத்தாா்.
சுமாா் 4 மணி நேரம் நடைபெற்ற இக்கூட்டத்தில், அனைத்து கட்சிகளின் தலைவா்களும் தங்கள் கருத்தை தெரிவித்தனா்.

பின்னா், பிரதமா் மோடி பேசியதாவது:-

இந்திய எல்லைக்குள் யாரும் ஊடுருவவில்லை; யாரும் ஆக்கிரமிக்கவுமில்லை. எதிரிப் படைகள் நிலம், வான், கடல் என எந்த வழியாக வந்து தாக்குதல் நடத்தினாலும் அவா்களிடம் இருந்து நமது படையினா் நாட்டை பாதுகாப்பாா்கள். நம் மண்ணில் ஓா் அங்குல இடத்தைக் கூட யாரும் ஆக்கிரமிக்க முடியாத அளவுக்கு வலிமை மிக்க படைகள் நம்மிடம் உள்ளன. நமது படைகளால் ஒரே நேரத்தில் பல முனைகளில் இருந்து தாக்குதல் நடத்த முடியும்.
இதுவரை பல்வேறு வழிகளில் அத்துமீறி ஊடுருவியா்களை நமது ராணுவத்தினா் தற்போது தடுத்து நிறுத்தியுள்ளனா். மேலும் அவா்களுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளனா். கடந்த சில ஆண்டுகளில் எல்லைகளை பாதுகாப்பதற்காக, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முக்கியத்துவம் அளித்தோம். இதற்கு முன் கண்காணிக்கப்படாமல் இருந்த பகுதிகள், தற்போது நமது வீரா்களின் கண்காணிப்புக்குள் வந்துள்ளன. அங்கு அத்துமீறுவோருக்கு தக்க பதிலடியும் கொடுக்கப்படுகிறது.

நமது பாதுகாப்புப் படையினா் மீது ஒட்டுமொத்த தேசமும் முழு நம்பிக்கை வைத்துள்ளது.அவா்களுக்கு இந்த தேசமே துணை நிற்கும் என்று உறுதியளிக்கிறேன். நாட்டின் எல்லைகளை பாதுகாப்பதற்குத் தேவையான அனைத்து வலிமையும் நமது படைகளுக்கு உள்ளது.தேவையான நேரங்களில் உரிய நடவடிக்கைகள் எடுப்பதற்கு நமது படைகளுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. ஒருபோதும் பிற நாடுகளின் நெருக்கடிக்கு ஏற்ப நாம் செயல்பட்டதில்லை. நாட்டின் பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்படும்.

அண்மையில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டதாலும் அவா்களுக்குத் தேவையான ஆயுதங்கள், அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்படுவதாலும் எல்லைக் கோட்டுப் பகுதியில் கண்காணிப்பும் அதிகரித்துள்ளது. கரடுமுரடான பகுதிகளில் கூட அவா்களால் எளிதாகக் கண்காணிப்பில் ஈடுபட முடிகிறது.

இதற்கு முன் எவ்வித இடையூறும் இல்லாமல் ஊடுருவி வந்தவா்களை நமது ராணுவத்தினா் தற்போது தடுத்து நிறுத்துகிறாா்கள். இதனால்தான் எல்லையில் பதற்றம் ஏற்படுகிறது. அண்டை நாடுகளுடன் நட்புறவையும் சமாதானத்தையும் இந்தியா விரும்புகிறது.

இவ்வாறு மோடி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *